
ஷா ஆலாம்,பிப்.12- “எங்கள் வாகனம் விபத்துக்குள்ளானபோது அடிப் அங்கு இல்லை. அதன் பிறகு பாதுகாப்பு கருதி நாங்கள் எல்லோரும் சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்குச் சென்றுவிட்டோம்” என்று அடிப்பின் சக ஊழியரான அகமட் ஷாரில் ஒத்மான் இன்று சாட்சியம் அளித்தார்.
சீபீல்ட் ஆலயக் கலவரத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்த முகமட் அடிப்பின் மரண விசாரணையில் மூன்றாவது சாட்சியமாக அகமட் ஷாரில் ஒத்மான் விசாரிக்கப்பட்டார்.
தாங்கள் இருந்த தீயணைப்பு வாகனம் தாக்கப்பட்டபோதும், அந்த வாகனத்தை மற்றொரு தீயணைப்பு வண்டி இடித்துத் தள்ளியபோதும், அடிப் எங்கிருந்தார்? அவருக்கு என்ன நடந்தது? என்று தங்களுக்கே தெரியாது என ஷாரில் இன்றைய விசாரணையில் கூறியுள்ளார்.
இந்த விசாரணையின்போது, சம்பவ நாளன்று அங்கிருந்த தீயணைப்பு வாகனங்கள் மூன்றின் மாதிரிகள் நீதிமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு, அன்று என்ன நடந்தது என்ற சூழல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக, அடிப் மரண விசாரணையின் நீதிபதி ரோப்பியா முகமட் சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.