
சிப்பாங்,பிப்.12- பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கிவிட்டதாக வெளியாகிவரும் செய்தி உண்மையில்லை என்று டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.
இந்நிலையில், இத்தகைய செய்தி எந்த அளவுக்கு நம்பத்தன்மையைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தாமல் அதனை நம்பிவிடக் கூடாது என்றும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“இது பொறுப்பற்ற தரப்புக்கள் வேண்டும் என்றே பரப்பும் வதந்தி. ஆராயாமல் இது போன்ற வதந்தியை நம்பிவிடக் கூடாது. இப்போதுள்ள சமூக ஊடக வசதிகள் இது போன்ற வதந்திகளைப் பரப்புவதற்கான எளிதான வழியாகிவிட்டது. அதனால், எதிராளிகள் வதந்திகளைப் பரப்ப இதுவொரு தளமாகிவிட்டது” என்று அஸ்மின் அலி மலேசியன் ஏர்லைன்ஸின் நல்லெண்ண விருந்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
பேஸ்புக்,டிவிட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் அஸ்மின் அலியை பிகேஆர் கட்சி நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.