Latestமலேசியா

ரந்தாவ் இடைத்தேர்தல்: ஶ்ரீராமின் வாய்ப்பு கைநழுவுமா?

புத்ராஜாயா, பிப்.18- ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இன்று கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அத்தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வேட்பாளராக டாக்டர் ஶ்ரீராம் சின்னையா மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெறுவாரா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

கடந்த மே மாதம் நடந்த 14 ஆவது பொதுத்தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் மையத்திற்குள் அனுமதி அட்டையில்லாததால் உள்ளே நுழைவதில் இருந்து டாக்டர் ஶ்ரீராம் தடுக்கப்பட்டதால் அந்தத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரிபுசார் டத்தோஶ்ரீ முகம்மட் ஹாசான் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த முடிவுக்கு எதிராக வழக்கு தொடுத்து டாக்டர் ஶ்ரீராம் தெர்தல் நீதிமன்றத்தில் வென்றார். அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. எனினும் மேல்முறையீட்டில் தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு உறுதி செய்யப்பட்டது.

விரைவில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராம் மீண்டும் போட்டியிட வேட்பாளராக தேர்வு பெறும் சாத்தியம் குறைவு என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இடைத் தேர்தல் நடத்தப்படுவது இன்றைய கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பில் உறுதியாகி விட்டதால், அடுத்த கட்டமாக இடைத் தேர்தலுக்கான பணியில் இறங்கப் போவதாக முகம்மட் ஹசான் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்தத் தீர்ப்பின் வழி, தமக்கு நீதி கிடைத்துள்ளது என்று ஶ்ரீராம் சொன்னார்.

மேலும் அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் பக்காத்தான் சார்பில் போட்டியிட தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும் இடைக்கால அம்னோ தலைவரான முகம்மட் ஹசான் மீண்டும் போட்டியிட்டால், அவருக்கு எதிராக ஶ்ரீராமிற்கு பதிலாக வேறு வேட்பாளரை பக்காத்தான் நிறுத்தும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker