Latestமலேசியா

சிரூலின் அடைக்கல விண்ணப்பத்தை ஆஸ்திரேலியா நிராகரித்தது!

கோலாலம்பூர், பிப்.20- மங்கோலிய மாடல் அழகியான அல்தான் துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சிரூல் அஸார் உமார், ஆஸ்திரேலியா தனக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அவரின் விண்ணப்பத்தை ஆஸ்திரேலியா நிராகரித்தது. மரண தண்டனையை மலேசியா முற்றாக அகற்றிய பின்னர், முன்னாள் போலீஸ்காரரான சிரூல், மலேசியாவிற்கு ஆஸ்திரேலியாவால் அனுப்பி வைக்கப் படுவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிட்னியில் உள்ள நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், ஆஸ்திரேலியா தனக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று சிரூல் விண்ணப்பித்திருந்ததாக அந்நாட்டின் ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.

அரசியல் குற்றத்தை புரிந்தமைக்காக சிரூலுக்கு தண்டனை வழங்கப் படவில்லை என்ற அடிப்படையில், அந்நீதிமன்றம் அவரின் விண்ணப்பத்தை நிராகரித்ததாக ஏபிசி தெரிவித்தது.

2006-ஆம் ஆண்டு கொலைச் செய்யப்பட்ட அல்தான் துயாவின் கொலையாளிகளான இருவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. தனக்கு மரண தண்டனை விதிக்கப் படும் என்றறிந்து, சிரூல் ஆஸ்திரேலியாவிற்கு தப்பித்துச் சென்று விட்டார்.

அங்கு சென்ற பின்னர், ஆஸ்திரேலியா தனக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று விண்ணப்பத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பத்தை நிராகரித்த ஆஸ்திரேலியா, மலேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப் பட்டால், சிரூல் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப் படுவார் என்று கூறியுள்ளது.

மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்வது தொடர்பில், கூடிய விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப் படும் என்று அண்மையில் பிரதமர் துறை அமைச்சர் லீ வூய் கியோங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker