Latestமலேசியா

திருட்டு முயற்சியா? தாக்கப்பட்டு கோவலன் மரணம்! அறுவர் கைது!

சுங்கை, பிப்,26- இங்குள்ள தாமான் ஆர்க்கிட் ஜெயாவில் வீடு புகுந்து திருட முயன்ற கும்பல் ஒன்றுடன், அந்த வீட்டில் வசித்த 6 பாகிஸ்தானியர்கள் கைகலப்பில் ஈடுபட்டதில் 31 வயதுடைய இந்திய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2:30 மணியளவில் நடந்ததாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்து அவர்கள் 3:15 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தக் கைகலப்பில் மாண்ட நபரின் பெயர் கோவலன் (வயது 31) என்று போலீசார் அடையாளம் கூறினர். அந்த வீட்டிற்கு போலீசார் வந்து சேர்ந்த போது, வீட்டினுள் மூச்சுப் பேச்சற்ற நிலையில் கோவலன் கிடந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ் படைத்தலைவர் வான் அஷாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்த போது அந்த நபர் இறந்து விட்டதாக தெரியவந்தது. மூவர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பாராங்கத்திகளுடன் வீடு புகுந்து திருட முயன்ற போது அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்கள் தடுக்க முயன்றதாக தெரிகிறது என்று வான் அஷாருடின் கூறினார்.

இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்ட நிலையில் அந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த இருவர் தப்பியோடி விட்டனர்.  இந்தச் சம்பவத்தின் போது தங்களிடம் பிடிபட்ட நபரை, அந்தப் பாக்கிஸ்தானியர்கள் தாக்கியுள்ளனர் என்று வான் அஷாருடின் சொன்னார்.

இது தொடர்பாக மேல் விசாரணைக்காக 27 வயது முதல் 38 வயதுடைய 6 பாகிஸ்தானியர்களையும் போலீசார் கைது செய்து, தாப்பா மாஜிஸ்திடேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து, மார்ச் 4 ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு தடுத்து வைக்க நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

சம்பவத்தின் போது இறந்து போன கோவலன், என்பவரின் உடல், ஈப்போ பொதுமருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker