Latestமலேசியா

மரணத்தின் வாயிலில் தந்தை; விடுதலை கிட்டுமா? -ஏக்கத்தில் மகள்

கோலாலம்பூர், மார்ச். 5- தனக்கு மூன்று வயதாக இருந்த போது மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது தந்தை, விடுதலையாக வேண்டும் என்று இன்னமும் நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார் 18 வயதை எட்டி விட்ட மகள் அகிலாண்டேஸ்வரி மைந்தன்.

தந்தையின் பாசம் என்னவென்பதையே அறியாமல் இதுவரை வளர்ந்துவிட்ட 18 வயதான அகிலாண்டேஸ்வரி மைந்தன், 2004 -இல் நடந்த கொலை மீதான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தந்தை மைந்தன் ஆறுமுகத்தின் வழக்குகளை மொத்தம் 19 நீதிபதிகள் விசாரித்து உள்ளதாகவும் ஆனால், தாங்கள் தாக்கல் செய்த மனுக்கள் யாவும் தோல்வி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர், தான் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப் பட்டிருப்பதாக இன்னமும் கூறி வருகிறார்.

தமது தாயார் குணலட்சுமி( வயது 48) சகோதரர்கள் நிர்மல் ராஜ் (வயது 20), சூரியராஜ் ( வயது 17) மற்றும் தங்கை சிவசங்கரி (வயது 16) ஆகியோர் தமது தந்தையார் எப்போது விடுதலையாகி தங்களுடன் இணைவார் என பெரிதும் ஏங்குவதாகவும் அவர் கூறினார்.

தந்தையின் விடுதலைக்காகத் தாங்கள் கூட்டரசு நீதிமன்றத்தையும் அணுகியதாகவும் ஆனால், அங்கும் தோல்வி கண்டதாகவும், இந்தக் கொலையில் நால்வர் கைது செய்யப்பட்டதில், மற்றவர்கள் விடுதலை செய்யபட்டு, தமது தந்தையாருக்கு மட்டுமே மரண விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறை வேற்றப்படாமல் தந்தையார் இன்னும் உயிருடன் இருப்பதால், நாட்டின் மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்தால், தமது தந்தையார் குடும்பத்தோடு இணைய வழி பிறக்கும் என்றும் அகிலாண்டேஸ்வரி நம்பிக்கை தெரிவித்தார் என எப்.எம்.டி.செய்தி கூறுகிறது.

இதனிடையே, மரண தண்டனையை அகற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அப்துல் ரஷிட் இஸ்மாயில், அந்த வழக்கைத் தாம் அறிந்திருப்பதாக சொன்னார். நாட்டின் கிரிமினல் நீதி முறைமையானது சிக்கலானது என்றும் முடிவடைந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker