Latestமலேசியா

ஸாக்கிர் நாயக்கை புகழ்வதா? அமைச்சருக்கு வலைவாசிகள் கடும் எதிர்ப்பு!

கோலாலம்பூர், மார்ச்.14 – நேற்று பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா, சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாயக்கை சென்று கண்டதோடு அவரின் சமய உரைகள் உந்து சக்தியாக இருப்பதாகப் புகழாரம் சூட்டியிருப்பது வலைத்தள வாசிகளின் பரவலான கண்டனத்துக்கு உள்ளானது.

ஸாக்கிரின் சமய உரைகள் உத்வேகத்தை கொடுத்தால், இங்குள்ள இந்து, புத்த மற்றும் கிறிஸ்துவர்கள் அவரை ஏன் வெறுத்து விமர்சனம் செய்ய வேண்டும். அவரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென அறைகூவல் விடுப்பது
ஏன்? என்று புரோர்டே (proarte) எனும் வலைத்தளவாசி ஒருவர் ‘மலேசியகினி’ இணையச் செய்தி தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார் என்ற காரணத்தினால், முஸ்லிம் நாடான வங்காள தேசத்தில் அவர் நுழையக் கூடாது என அறிவித்தது ஏன்? அதை முஜாஹிட் உணரவில்லையா? என அவர் வினவினார்

2016இல் அங்கு நடந்த இனக் கலவரத்திற்கு ஸாக்கிரே காரணம் எனக் கூறி அவரின் உரைகள் அந்நாட்டு தொலைக் காட்சிகளில் தடை செய்யப்பட்டது ஏன்? என வினா எழுப்பியுள்ளார். அப்படிப்பட்டவரை முஜாஹிட் கட்டித் தழுவி பாராட்டு தெரிவிப்பதன் நோக்கம்தான் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

மற்ற சமயங்களை இழிவாகப் பேசி சிறுமைப்படுத்துவது ஊக்கமூட்டும் செயலா? அவர் மீது செய்யப்பட்ட புகார்களுக்கான நடவடிக்கை என்னவானது என்பதை முஜாஹிட் விளக்க வேண்டும்.

ஸாக்கிரை பாராட்டியதன் மூலம் சரிந்து வரும் தமது செல்வாக்கை முஜாஹிட் தூக்கி நிறுத்த நினைக்கிறாரா? அவர் தமது சுய நலத்திற்காக பக்காத்தானின் சமத்துவக் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாரா? என மற்றொரு வலைத்தளவாசியான எரிக் எல்சிசி (Eric LCC) என்பவர் சாடியுள்ளார்.

பக்காத்தான், முஸ்லிம் அல்லாதோரின் ஆதரவும் வாக்கும் முக்கியமில்லை என்று நினைக்கின்றதா என கேள்வி எழுப்பிய இன்னொரு வாசகர்,

ஸாக்கிர் மற்ற சமயங்களை நிந்தனை செய்து உரை நிகழ்த்துவது பொது விவாதங்களில் அல்லவென்றும், அங்கு கூடியிருக்கும் மற்ற சமயங்களைத் தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத மக்களின் கைதட்டலைப் பெறுவது எவ்வகையில் நியாயம்?

மதங்களை ஒப்பிட்டு, இழிவு படுத்தும் செயலை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஸாக்கிரின் செயலை முஜாஹிட் பாராட்டுகிறாரா என அல்பர்ட் பொன்னையா (Albert Ponniah) எனு வலைத்தளவாசி கேட்டுள்ளார்.

அவர் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதாரிடையே விஷத்தைத் தூவி பிரிவினையை ஏற்படுத்துவதாக வாசகர் ஒருவர் குற்றம் சாட்டினார். அவரின் நோக்கத்தை முஜாஹிட் உணரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிலிருந்து ஓடிவந்து 2.9 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் தஞ்சம் புகுந்த ஸாக்கிரின் நோக்கம்தான் என்ன?

18.2 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் நாட்டில் தமது சமய உரைகளை நிகழ்த்தி அவர்களுக்கு ஊக்கமூட்ட முடியாத ஸாக்கிர், அங்கிருந்து ஓடி வந்தது எதனால்? இந்தியாவில் அவர் தேடப்படும் நபராக இருக்கிறார்.

முஸ்லிம் அல்லாதவர்களை இழிவு படுத்தினால் தண்டனை தராமல் அடைக்கலமா? என்றும் டேவிட் தாஸ் (David Dass) ஒருவர் கேட்டுள்ளார்.

விஜய்47 என்பவர், பக்காத்தான் அமைச்சர்கள் அக்கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, தங்களது செல்வாக்கை தூக்கி நிறுத்த முனைந்தால், 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிவரும் என எச்சரித்தார்.

ஓர் அடி முன் வைத்து நடந்தால், ஈரடி பின்னோக்கிச் செல்வதுதான் புதிய மலேசியாவின் செயல்பாடா? என டியாபோலோகிரேசி (Diabolocracy)கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker