Latestமலேசியா

சமய ரீதியான வன்முறையை மலேசியா எதிர்க்கும் – அமைச்சர்

கோலாலம்பூர், மார்ச். 23- வன்முறை எந்தச் சமயத்தையும் சாராதிருப்பதால், அதனை மலேசியா கடுமையாக எதிர்க்கும் என பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா தெரிவித்தார்.

இன்று காலை தலைநகர் மெர்டேக்கா சதுக்கத்தில் நடந்த சமாதான ஒற்றுமைப் பேரணியில் உரையாற்றும்போது முஜாஹிட் அவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தமதுரையில், சமய, இன ரீதியான பாகுபாடு, வன்முறை மற்றும் கொலைகளை மலேசியா வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன, சமய வெறுப்புகளால் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவதற்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைதிப் பேரணியானது கிரிஸ்சர்ச்சில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை எதிர்க்கும் நோக்கிலும் மலேசியா அம்மாதிரியான வன்முறையை எதிர்த்து அமைதியையும் நல்லிணக்கத்தையும் தற்காக்கும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவும் பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை 8.30 மணியளவில் ஆயிரக் கணக்கானோர் கோலாலம்பூர் சோஹோ பேரங்காடியின் முன்புறம் கூடி டத்தாரான் மெர்டேக்கா வரை பேரணியாக நடந்து சென்றனர்.

பெரும்பாலோர் வெள்ளை உடையில், வெள்ளைப் புறாவையும் செம்பரத்தம் பூவையும் மையமாக வைத்து, முஜாஹிட், தேசிய ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பெ.வேதமூர்த்தி, அரசியல் தலைவர்கள், சீக்கியம், தாவோயிஸ்ட், புத்த, கிறிஸ்துவ, இந்து மற்றும் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த தலைவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

எவ்வகையான வன்முறையையும் மலேசியா எதிர்க்கும் என்பதை வலியுறுத்தும் 2019- கோலாலம்பூர் அமைதி பிரகடனத்தின் அம்சங்களை முஜாஹிட் வாசித்தளித்தார். இந்தப் பேரணியைப் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் இஸ்லாமிய சமய விவகாரப் பிரிவும் சிவில் சமூகக் கழகமும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker