Latestமலேசியா

கல்வித் துறையில் இந்தியர்கள் புறக்கணிப்பா? – தவறான கூற்று -அமைச்சு

புத்ரா ஜெயா, ஏப். 2 – கல்வித் துறையின் வேலை வாய்ப்புகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப் படுவதாக மார்ச் 31இல் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மையில்லை, ஆதார அடிப்படையற்றது என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

கல்வித் துறையில் ஏற்படும் காலியிடங்களைக் கல்விச் சேவை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அதற்கேற்ற வகையில் ஆணையம் தகுந்த நடவடிக்கையை எடுக்கும்.

கல்வித் துறையின் வேலையிடங்களை நிரப்பக் கல்வி அமைச்சு எந்தவொரு நிபந்தனையையும் விதிப்பதில்லை. எந்த மட்டத்திலும் இனம், சமய வாரியாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அமைச்சு நிர்பந்திப்பது இல்லை.

கல்வித் துறையின் வேலையிடங்களை நிரப்ப கல்விச் சேவை ஆணையம் தொழில் நிபுணத்துவத்துடனும் நேர்மையாகவும் செயலாற்றி வருகிறது.

மேற்கண்ட பத்திரிகைச் செய்தியில் இன ரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. அது கல்வி அமைச்சின் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும்.

தரமான கல்வியை அடைய அனைத்து இனங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடு இருக்கும்போது, கல்வியமைச்சும் கல்விச் சேவை ஆணையமும் ஓரினத்துக்கு மட்டுமே சலுகை அளித்து வருவதாகக் கூறுவது உண்மைக்கு முரணானது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொறுப்பான பத்திரிகையாக விளங்கி வரும் அந்த நாளிதழ், செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் அதன் உண்மையான தகவலைப் பெற்றிருக்க வேண்டும். தவறான செய்தியால் கல்வித் துறைக்கும் கல்விச் சேவை ஆணையத்துக்கும் மக்களிடையே தவறான கண்ணோட்டத்துக்கு இடமளிக்கும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker