Latestமலேசியா

ஐபிசிஎம்சியை அமைக்க வேண்டும் – பேரணி வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப். 8 –  போலீசார் மீது எழுப்பப்படும் புகார் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் (ஐபிசிஎம்சி) ஆணையத்தை விரைவில் அமைக்க வேண்டுமென கோரி இன்று காலை 11.20 மணியளவில் நாடாளுமன்ற முகப்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

பல்வேறு அரசு சாரா இயக்கங்களின் 40 பேரடங்கிய குழு, தலைநகர் பாடாங் மெர்போக்கிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் பதாகை மற்றும் கார்ட்போர்டில் கையினால் எழுதப்பட்ட வாசகங்களை ஏந்திக் கொண்டு  பேரணியாகச் சென்று மகஜரை வழங்கினர்.

அந்தக் குழுவில் மரண தண்டனையை ஒழிக்கும் இயக்கம், தடுப்புக் காவலில் மரணத்தை எதிர்க்கும் அமைப்பு,  சுவாராம், வழக்கறிஞர் மன்றத்தின் ஒரு பிரிவு, மனித உரிமையை வலியுறுத்தும் புரோஹாம் எனும் அமைப்பு, இக்ராம், வலுக்கட்டயமாகக் காணாமல் போகச் செய்வதை எதிர்க்கும் கேஜ்ட் எனும் இயக்கங்களைப் பிரதிநிதித்து 40  அதில் கலந்து கொண்டனர்.

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் போலீசாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க  ஐபிசிஎம்சியை அமைக்க வேண்டுமென அது வலியுறுத்துவதாக அதன் பிரதிநிதியான காலிட் இஸ்மத் தெரிவித்தார்.

அந்தக் குழுவில் போலீஸ் காவலில் இருக்கும்போது மரணமடைந்தோரின் குடும்பத்தினர் 10 பேரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தக் குழுவினர் தங்களது மகஜரை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினருமான  மரியா சின் அப்துல்லாவிடம் மகஜரை ஒப்படைத்தனர்.

அண்மையில் பாதிரியார் ரேய்மண்ட் கோவும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டும் காணாமல் போனதற்கு புக்கிட் அமான் சிறப்புப் படையும் ஒரு காரணம் என சுஹாகாம் அறிவித்ததை அடுத்து போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்க ஐபிசிஎம்சியை உடனடியாக அமைக்க வேண்டுமென பேட்ரியோட் மற்றும் ஜி25 எனும் அமைப்புகள் உட்பட பல இயக்கங்கள் நெருக்குதல் தொடுத்து வருகின்றன.

இதற்கு முன்னர், காலை 10 மணியளவில் ரோம் சாஸனத்தை எதிர்த்து 40 பேர் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றும் நாடாளமன்ற முகப்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker