Latestமலேசியா

விலையுயர்ந்த காரை வாங்கி மோசடி செய்யும் கும்பல் – போலீஸ் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஏப். 24 –  விலையுயர்ந்த காரை வாங்குவது போல நடித்து அந்தக் கார்களை ஏமாற்றி பெயர் மாற்றம் செய்யும் மோசடிக் கும்பல்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கோலாலம்பூர் மாநகர புலனாய்வு இயக்குனர் டத்தோ மஸ்லான் மன்சோர் கேட்டுக் கொண்டார்.

டாக்டர் சார்லஸ் பெர்னான்டஸ் என்பவர் தமது ரேஞ்ச் ரோவர் இவோக்கி காரை விற்பதற்காக கடந்த டிசம்பரில் இணையத் தளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

அந்தக் காரை வாங்குவதற்கு இணங்கிய ஒருவர்,  அந்தக் காருக்கு  196,000 ரிங்கிட்டுக்கு விலை பேசினார்.  காரைச் சோதனையிடவும் அதன் உரிமத்தை மாற்றவும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதற்கு முன்னர் பேசப்பட்ட விலைக்கு வங்கி டிராப்ட் தமக்குத் தரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட வங்கி, அந்த டிராப்ட் போலியானது என தெரிவித்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதாக  பெர்னான்டஸ் உணர்ந்துள்ளார். எனினும், அவரின் கார் வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர்,  அந்தக் கார் சுங்கை பீசியில் உள்ள பழைய கார் விற்பனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்தக் காரை அங்கிருந்து பறிமுதல் செய்தாலும் பெர்னான்டஸ் அதனை இன்னும் பெற முடியாமல் இருக்கிறார்.

பல கார் உரிமையாளர்கள் அம்மாதிரியான மோசடியில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் சில சமயங்களில் பேசப்பட்ட காரின் விலையானது விற்பவரின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் வங்கியின் பற்றுச் சீட்டுகளும் காட்டப்பட்டுள்ளன. ஆனால் அவை போலியானவை என பின்னர் தெரியவந்துள்ளது.

இதே மோசடி கும்பல் வட்டிக்குக் கடன் கொடுப்பது, அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு,  குறைந்தது 500,000 ரிங்கிட் வரை மோசடி செய்திருப்பதாக மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker