Latestமலேசியா

ஜாக்கிருக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து நான் மாறவில்லை- முஜாஹிட் !

கோலாலம்பூர், ஏப். 26 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாக்கிர் நாய்க்கின் மீது எதிர்மறையான தமது நிலைப்பாடு  அப்படியே இருப்பதாகப் பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா தெரிவித்துள்ளார்.

ஜாக்கிர் சில காலத்துக்கு முன்னர் தம்மை வந்து பார்த்ததை ஒப்புக் கொண்ட முஜாஹிட், அமைச்சர் என்ற முறையில்  மற்றவர்களைப் போலவே அவரும் தம்மைக் கண்டதாகவும் ஆனால் அதனை சிறப்பாகச் சொல்வதற்கில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் சமய உரைகளில் மற்ற சமயங்களைச் சாடிப் பேசுவது விரோதத்தை வளர்க்கும் என்பதால் அது நாட்டுக்கு ஏற்றதல்ல என்ற தமது கருத்து மாறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜாக்கிர் தமது சமய போதனைகளின் மூலம் தீவிரவாதத்தைத் தூண்டி விடுவதாகவும் பண முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டி,  இந்தியா அவரின் குடியுரிமையையும் கடப்பிதழையும் ரத்து செய்து, அவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது. மேலும் அவரின் வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு அவரைக் கைது செய்ய அனைத்துலக போலீஸின் (இண்டர்போல்) சிவப்பு அறிக்கையைக் கோரியிருக்கிறது.

இதனிடையே, பக்காத்தான் ஆட்சிக்கு வந்த பின்னர், பிரதமர் துன் மகாதீர் முகமட் ஜாக்கிரை தற்காத்து அவர் இங்கு குழப்பம் விளைவிக்காத வரையில் அவரை நாடு கடத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். மேலும், தேசிய முன்னணியின் ஆட்சியில் ஜாக்கிருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை குண்டு வெடிப்பில் சுமார் 290 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முழு காரணகர்த்தாவாகச் சத்தேகப்படும் மெளல்வி ஸஹ்ரான் ஹாஷிம், ஒரு இமாம் என்றும் இனவாதம் மற்றும் இஸ்லாமிய தலைமைத்துவத்தை கடுமையாக முன்னெடுத்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையி 8 இடங்களில் குண்டு வெடிக்க வைத்து பலரும் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்ததவரான அவர்,   யூ டியூப்பில் வெளியிட்டுள்ள தமது பல உரைகளில், ‘ஜாக்கிர் நாயக்கிற்கு இலங்கை முஸ்லிம்கள் எண்ண செய்யப் போகிறார்கள்’ என்ற கேள்வியைத் தொடுத்துள்ளதை ஆராய்ந்தால், இந்த மெளல்வி ஸஹ்ரான் ஹாஷிம் ஜாக்கிரின் உரைகளால் கவரப்பட்டு,  தூண்டப்பட்டவர் என தெரியவருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker