Latestமலேசியா

மலேசியத் தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக்க தமிழக உயர்க் கல்வி கூடங்கள் ஆர்வம்!

கோலாலம்பூர், ஏப். 30- மலேசியத் தமிழ் இலக்கியத்தை அனைத்துலக அரங்கில் அறிமுகம் செய்ய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக தற்போது தமிழ்நாட்டில் மூன்று உயர்க் கல்விக்கூடங்களில் மலேசிய இலக்கியவாதிகள் படைப்புகள் பாட நூலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று சங்கத் தலைவர் இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

தஞ்சை பல்கலைக்கழகம், கோயம்பத்தூர் நேரு ஸ்ரீ வித்யாலயா அறிவியல், கலை கல்லூரி, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி ஆகியவற்றில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை மாணவர்கள் தேர்வு பாடமாக எடுத்து பயில்கின்றனர்.

இந்த தொடக்கமும் அறிமுகமும் தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது இலக்கியம் மீதான தேடலை ஏற்படுத்தி இருக்கிறது.

மலேசிய தமிழ் இலக்கியத்தை தங்களது கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அறிமுகப்படுத்துமாறு தமிழ் நாட்டில் இருந்து 10க்கும் மேற்பட்ட உயர்க்கல்விக் கூடங்கள் கோரிக்கையை வைத்துள்ளன என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 57 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

நூறாண்டு கால பழைமை வாய்ந்த மயிலம் கல்லூரியோடு பேச்சு நடத்தி அது நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் சொன்னார்.

கடந்த 2004 ஆண்டு சங்கம் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம் என்ற திட்டத்தைத் தொடங்கிய போது, குறிப்பிடத் தரப்பினர் விமர்சனக் கனைகளை தொடுத்தனர்.

அவற்றுக்கு எல்லாம் பின்வாங்காமல் சங்கம் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் வழி நமது இலக்கியத்தை தமிழ் நாட்டில் பாடப் புத்தகமாக பயன்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 57ஆவது ஆண்டுக்கூட்டம் கோலாலம்பூரில் நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பிரதிநிதியாக வருகை புரிந்த பாக்கியநாதன் அதிகாரப்பூர்வ தொடக்கி வைத்தார்.

ஆண்டுக்கூட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற எழுத்தாளர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் தமிழக மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் திரு.மல்லை சத்தியா, மதிமுக இளைஞர் அணி துணைப் பொதுச் செயலாளர் திருச்சி இராஜன் இளமுருகு, திருப்பூர் முத்து, சிவகாசி பிரபாகரன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர். .

எழுத்தாளர் சங்க ஆண்டுக்கூட்டத்தின் சிறப்பு அங்கமாக இவ்வாண்டும் நான்கு தமிழ் அறிஞர்கள் நினைவாக நான்கு எழுத்தாளர்களுக்கு தங்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழவேள் கோ.சாரங்கபாணி விருது ரய்லி முனியாண்டிக்கும், மலேசியத் தமிழ்ப் பத்திரிகை துறை பிதாமகன் எம்.துரைராஜ் விருது திரு. கே.ஐ.நாராயணனுக்கும் தனிநாயக அடிகளார் விருது கவிஞர் தி.ப.செழியனுக்கும், தமிழவேள் ஆதி.குமணன் விருது குமாரி சாந்தா காளியப்பனுக்கும் வழங்கி சிறப்பிக்கப்படடது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker