Latestமலேசியா

காதலியை கொன்று பிணத்துடன் தூங்கிய நபருக்கு மரண தண்டனை உறுதி!

புத்ரா ஜெயா, மே. 1 – காதலியைக் கொன்று, ஒரு நாள் இரவு காதலியின் உடலோடு படுத்துறங்கிய பின்னர் எரியூட்டிய நபருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கண்டீன் உரிமையாளரான அப்துல் காலிட் மாட் ஈசாவின் மேல் முறையீட்டு மனுவை மூவர் அடங்கிய மேல் முறையீட்டு அமர்வு, நீதிமன்ற ஆணையர் கமார்டின் ஹாஷிம் விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.

அப்துல் காலிட்டுக்கு குற்றவியல் சட்டம் விதி 178(2) இன் கீழ் நீதிமன்ற ஆணையர் வழங்கிய மரண தண்டனை நியாயமானதே என மேல் முறையீட்டு நீதிபதிகள் யாக்கோப் மாட் சாம், லாவ் பீ லான் மற்றும் காலிட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் 1இல் பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 6.40 வரை ரொஹானி ஹாஷிம் (வயது 30) என்ற பெண்ணை புக்கிட் மெர்தாஜாம், புக்கிட் தெங்கா, ஜாலான் பெங்காலான் டத்தோ கிராமாட்டில் உள்ள வீடொன்றில் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், அதே ஆண்டு செப்டம்பரில் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டுமென மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்மி, குற்றஞ்சாட்டப்பட்ட காலிட் குற்றவாளி என தீர்ப்பளித்தார். ரோஹானியை காலிட் ஸ்பானரில் பல முறை அடித்ததோடு அவரின் தலையைச் சுவரில் மோதியதால் அவர் மரணமடைந்தார்.

அவரின் சகோதரரின் பிள்ளைகள் மறுநாள் வீட்டுக்குச் சென்று பார்க்கையில், படுக்கை அறையில் இரத்தம் உறைந்திருந்ததாகவும் வீட்டுக்குப் பின்னால், எரிக்கப்பட்ட உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டனர்.

போலீசார் வீட்டுக்குப் பின்னால், மரத்துக்கு அடியில் எலும்பின் பாகங்கள் மற்றும் தலையின் ஓடு முதலியவை ஒரு பிளாஸ்டிக்கினால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டனர்.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் காலிட் மனநல மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தும் அவர் இயல்பாகவே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker