Latestசினிமா

நில மோசடி வழக்கு: சரத் குமார்-ராதாரவி கைதாவார்களா?

சென்னை,மே.6- நடிகர் சங்க நில மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாரும் ராதாரவியும் ஏன் கைது செய்து விசாரிக்க வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதால் இருவரும் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை, ஆவணங்களை தயாரித்து முறைகேடாக விற்பனை செய்ததாக செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் நடிகர் விஷால் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த 2017 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

முன்பு நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகித்த ராதாரவி, தலைவராக பதவி வகித்த சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ் நடேசன் ஆகியோர் முறைகேடாக அந்த நிலத்தை விற்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு பதிவு செய்யக் கோரி விஷால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த உயர் நீதிமன்றம், புகாரில் அடிப்படை இருந்ததால் வழக்கு பதிய உத்தரவிட்டது.

அதன்படி சரத்குமார் -ராதாரவி உள்ளிட்டோருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவினர் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என கூறி வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற கோரி விஷால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. கே. இளந்திரையன், இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராதாரவியையும் சரத்குமாரையும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker