Latestமலேசியா

எஸ்டேட் தொழிலாளர்களை இழிவுபடுத்துவதா? நஜிப்பின் வழக்கறிஞருக்கு பிஎஸ்எம் கண்டனம்!

கோலாலம்பூர், மே.10- தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா கூறியிருக்கும் கருத்துக்கு பிஎஸ்எம் எனப்படும் மலேசியா சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ். அருள்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாவின் கருத்து மிகவும் முரட்டுத்தனமாகவும் இழிவு மற்றும் அவமதிக்கும் வகையிலும் உள்ளதாக அவர் சாடினார்.

நேற்று நீதிமன்ற வழக்கின் போது முன்னாள் பிரதமர் நஜிப் ‘செல்பி’ எடுத்துக் கொண்டு இருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை ‘எஸ்டேட் தொழிலாளிகளை போல நடந்து கொள்ளக்கூடாது’ என்று வழக்கறிஞர் சாடியிருந்தார்

மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவரிடமிருந்து இத்தகைய கருத்தை கேள்விப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று அருட்செல்வம் சொன்னார்.

இத்தகையோரின் மனப்போக்கு இதுதான். எஸ்டேட் தொழிலாளர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இந்த நாட்டை மேம்படுத்துவதில் அவர்கள் வியர்வை சிந்தி உழைத்து இருக்கிறார்கள் என்றார் அவர்.

படித்த மனிதர் என்று கூறப்படும் இவர், தன்னுடைய வாதத்தை நியாயப் படுத்திக் கொள்வதற்காக குறிப்பிட்ட தரப்பினரின் மீது அடிப்படையற்ற அவமதிக்கும் சொற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, அவர் தன்னுடைய தொழில் மேன்மை போக்கை காட்டி இருக்க வேண்டும் என்று அருட்செல்வம் சாடினார்.

தொழில் மேன்மையை எதிர்பார்க்கிற ஷாபி அப்துல்லா, அதே தொழில் மேன்மையுடன் நடந்து கொள்ள வேண்டாமா? எஸ்டேட் தொழிலாளர் பற்றிய வழக்கறிஞர் ஷாபியின் கூற்று, என்ன செய்தியை நமக்குச் சொல்கிறது? அவர் என்ன செய்தியை நமக்குச் சொல்ல முனைந்திருக்கிறார்? தோட்டத் தொழிலாளர்கள் முட்டாள்கள், சோம்பேறிகள் என்று சொல்ல வருகிறாரா? என்று அருட்செல்வம் கேள்வி எழுப்பினார்.

எஸ்டேட்தொழிலாளர்களை அவசியமற்ற அவமதிப்பு சொற்களைப் பயன்படுத்திய வழக்கறிஞர் ஷாபி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பைத் தவிர வேறு எதுவும் அவரது செயலுக்கு பொருத்தமானதாக அமையாது என்று அருட்செல்வம் வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தில் இருந்த போது முன்னாள் பிரதமர் நஜிப் தன்னுடைய கைத்தொலைபேசியில் செல்பி எடுக்கவில்லை. மாறாக, அந்த செல்பி மோட்டில் இருந்த கேமராவின் கண்ணாடியில் அவர் முகம் பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஷாபி அப்துல்லா விளக்கம் தெரிவித்தார்.

அவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் என்று செய்தியாளர்கள் செய்தியை ர் வெளியிட்டதை தொடர்ந்துதான் செய்தியாளர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் போல நடந்து கொள்ளக் கூடாது என்ற கூற்றை ஷாபி அப்துல்லா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker