Latestமலேசியா

இந்தியர்களுக்கு 7 நாடாளுமன்ற பெரும்பான்மை தொகுதிகள் வேண்டும் !- ஹிண்ட்ராப்

கோலாலம்பூர்,மே.13-  நாடாளுமன்றத்தில் இந்திய சமூகத்தின் உரிமை குரல் இன்னும் பலமாக ஒலிக்க அங்கு 7 இந்தியர் சமூக பெரும்பான்மை தொகுதிகள் வேண்டும் என ஹின்ட்ராப் 2.0 அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.

நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இவ்வமைப்பினர் இன ஒடுக்குதல், இந்தியர்கள் எதிர்நோக்கும் குடியுரிமை பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும் என முழக்கத்துடன் அமைதி மறியலில் ஈடுப்பட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மறியலில் அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. உதயகுமார் தலைமையேற்றார்.

நம் நாட்டில் இந்தியர்களை பின்னடைவு செய்யும் முக்கிய சமுதாய பிரச்னைகளில் ஒன்றாக இந்த குடியுரிமை பிரச்னை உள்ளது.இங்கு சுமார் 350,000 இந்தியர்கள் இந்த குடியுரிமை பிரச்னையை எதிநோக்கி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படும் என வாக்குறுடி அளித்த பக்காத்தான் ஹராப்பான் அணி ஆட்சியை பிடித்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இக்காலக்கட்டத்தில் சுமார் 1,841 நபர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை இங்கு குடியுரிமை இல்லாமல் தவிக்கும் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும். ஆனால் இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் நினைத்தால் நொடி பொழுதில் சரி செய்து விடலாம்.

மேலும் இந்த நிலைக்கு நாடாளுமன்றத்தில் இந்திய சமூக பிரதிநிதிகளின் குரல் பலமாக ஒலிக்காதே முக்கிய காரணமாகும்.குறிப்பாக அவர்கள் தங்களின் “மேல்மட்ட அதிகாரிகளாக” கருதப்படும் மலாய், சீன தலைவர்களின் கட்டளைக்கு கீழ் செயல்பட வேண்டிய கட்டாயதிற்கு தள்ளப்படுகின்றனர் என செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும்பான்மை சமுகத்தினர் கூட சிறுபான்மையினருக்காக குரல் எழுப்புகின்றனர்.ஆனால் இங்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமாக உள்ள மலாய், சீன சமூக பிரதிநிதிகள் இந்தியர்கள் நலன் குறித்து குரல் எழுப்புவது மிகவும் அரிது.

நாங்கள் இன அடிப்படையிலான அரசியலை ஆதரிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த தேசிய முன்ணனி அரசாங்கமும் தற்பொழுது இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமும் எங்களின் பிரச்னையை முழுமையாக சரி செய்யவில்லை.

இதனை கருத்தில் கொண்டு தான் நம் நாட்டில் இந்திய சமுதாயத்தினருக்கு குறைந்தபட்சம் 7 நாடாளுமன்ற பெரும்பான்மை தொகுதிகள் வேண்டும் என்ற வலியுறுத்தலை முன்வைக்கின்றோம். எனவே பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ பாராட், கோத்தா ராஜா, போர்ட்டிக்சன், தெபராவ், கெமரன் மலை நாடாளுமன்ற தொகுதிகளை இந்தியர்களின் பெரும்பான்மை தொகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த இடங்களை இந்தியர்களின் பெரும்பான்மை தொகுதிகளாக உருமாற்றினால் நாடாளுமன்றத்தில் நம் சமூகத்தின் நலனுக்கான குரல் இன்னும் பலமாக ஒலிக்கக்கூடும். இந்த தொகுதிகளின் பிரதி நிதிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்தியர்களின் நலன் மீது அக்கறை உள்ள பிற இனத்தவரும் இந்த பிரதி நிதி பொறுப்பை ஏற்கலாம் எனவும் உதயகுமார் தெளிவுப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker