Latestமலேசியா

சாலை விபத்து: மீட்பு பணிக்கு ஓடிய தீயணைப்பு வீரருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

ஜெராண்டூட், மே.13- சாலை விபத்து ஒன்று குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் ஜெராண்டுட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவைச் சேர்ந்த இதர ஏழு வீரர்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த 48 வயதுடைய காலிட் அபு காசிம் என்ற தீயணைப்பு வீரருக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஜாலான் ஜெராண்டுட் – தெமர்லோ சாலையில் 14 ஆவது கிலோ மீட்டரில் கம்போங் தெப்பிங் திங்கி என்ற இடத்தில் 4 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்து ஒன்று நடந்துள்ளது.

இதுகுறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் காலிட் அபு காசிமும் இதர 7 தீயணைப்பு வீரர்களும் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட சிலரின் அடையாள கார்டுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தபோது காலிட் அபு காசிமிற்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அடையாளக் கார்டுகளில் ஒன்று 44 வயதுடைய ரார்சலினா அபு காசிம் என்ற பெண்மணிக்கு உரிய அடையாளக் கார்டாகும். இது காலிட் அபு காசிமின் இளைய சகோதரிக்கு உரியது. அதிர்ச்சி அடைந்த காலிட் தன்னுடைய சகோதரியை தேடத் தொடங்கினார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்களுக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு இருந்த அவரது சகோதரியின்உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது சகோதரி ஓட்டிய கார் இந்த விபத்தில் சிக்கி இருந்தது.

வாகனங்களின் மோதலின் போது காலிட்டின் சகோதரி தூக்கி எறியப்பட்டு சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டார். மேலும் ஒரு வாகன ஓட்டுனரான கூ கூன் லியாங் (வயது 37) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்து இருக்கிறார். இதர மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தன்னுடைய சகோதரியை இழந்துவிட்ட நிலையிலும் காலிட் தன்னுடைய கடமையை தவறாமல் நொறுங்கிய நிலையில் இருந்த மற்றொரு காரில் சிக்கிக் கொண்டிருந்த மூவரைமீட்பதில் இதர வீரர்களுடன் சேர்ந்து கண்ணீருடன் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker