Latestமலேசியா

கட்டுப்பாட்டை இழந்த வீரா காருடன் சிமெண்ட் லோரி – பேருந்து மோதல்!

உலு சிலாங்கூர், மே. 15- வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில்  சிலாங்கூருக்கு அருகில்  3 வாகனங்களை மோதிக் கொண்ட விபத்தில் ஆடவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நேற்றிரவு 9 மணியளவில் புரோட்டோன் வீரா ரக கார், சிமெண்டு லோரி மற்றும் வட மலேசியா பல்கலைக்கழத்திற்குச் சொந்தமான பேருந்து ஆகியவை மோதிய இந்த விபத்தில் புரோட்டோன் வீரா காரின்  ஓட்டுநர் தலையில் படுகாயம் அடைந்தார்.

அந்த விபத்தானது,  புரோட்டோன் வீரா கார் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டது என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் பக் பாய் தெரிவித்தார்

தெற்கில் இருந்து வடக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த  புரோட்டோன் வீரா கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து,  இடதுபுறச் சாலைத் தடுப்பை மோதிய பின்,  பின்புறம் வந்து கொண்டிருந்த சிமெண்டு லோரியால் மோதப்பட்டது.

இதனை அடுத்து, அந்தக் கார் ஒரு சுற்று சுற்றி, நடுச் சாலைக்கு வந்ததால்,  38 பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த  வட மலேசியா பல்கலைக்கழக பேருந்தினால் மோதப்பட்டு விபத்துக்கு உள்ளானதாக  லிம் பக் பாய் தெரிவித்தார்.

இதன் விளைவாக சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுனர் காரினுள் சிக்கித் தலையில் படுகாயம் அடைந்ததை அடுத்து,  சுங்கை பூலோ மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப் பட்டார். மேலும், பேருந்துப் பயணிகள் 38 பேரும்,  சிமெண்டு லோரி ஓட்டுனரும் எந்த ஒரு காயமும் இன்றி உயிர்தப்பினர் என லிம் பக் பாய் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்து 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 43 (1) இன் கீழ் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker