Latestமலேசியா

லோரியோடு மோதிய கார் கால்வாயில் விழுந்தது; இருவர் மரணம்

தாப்பா, மே.15 – ஈப்போ-கோலாலம்பூர் நெடுஞ்சாலையின்  52.8 ஆவது கிலோ மீட்டரில், கொள்கலன் லோரியும் (டேங்கர் லோரி) காரும்  விபத்துக்குள்ளானதில்,  இரு நண்பர்கள் உயிரிழந்தனர்.

நேற்று இரவு,  11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.  புரோடுவா மைவீ காரில் பயணித்த சியோங் சௌன் வேய், வயது 36 மற்றும் யோவ் ஷு யெய், வயது 30 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தாப்பா மாவட்ட போலீஸ் அதிகாரி வான் அசாருடின் தெரிவித்தார். மேலும், 28 வயதுடைய லோரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன் தொடர்பாக மேற்கொண்ட  விசாரணையில்,  இரு நண்பர்கள் பீடோரிலிருந்து கம்பார் நோக்கி காரில் பயணித்ததாகவும் அந்தக் கொள்கலன் லோரி எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.  அந்தச் சமயத்தில் காரின் ஓட்டுநர், முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல எத்தனித்தபோது,  திடீரென எதிர் திசையில், வந்த கொள்கலன் லோரியை மோதி, பல முறை சுற்றிய பின்னர், சாலையின் அருகே உள்ள கால்வாயில் விழுந்ததாக வான் அசாருடின் தெரிவித்தார்.

அந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலம்  சவப் பரிசோதனைக்காக தப்பா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் அதிக சேதமடைந்ததால் வாகன சோதனை மையமான புஸ்பாகோமிற்கு (PUSPAKOM) கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, போக்குவரத்துச் சட்டம், பிரிவு  41(1)இன் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வான் அசாருடின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker