Latestமலேசியா

தாதி சித்தி கரினா கொலை: அன்னிய பிரஜைகள் 2 பேர் கைது!

ஷா ஆலம், மே.16- காணாமல் போன  செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியார் சித்தி கரினா பிந்தி முகமட் கமாருடின் (வயது 40)  பின்னர் வீடு ஒன்றில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில்  இருவர் கைது செய்யப்பட்ட வேளையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஆடவன் ஒருவனையும் காவல்துறை தேடி வருகின்றது.

கடந்த மே 8ஆம் தேதியன்று காணாமல் போன அம்மாது சைபர் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இறந்து கிடந்தார்.  மே 8ஆம் தேதி லை 4 மணியளவில் செர்டாங் மருத்துவமனை அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் ‘ஹொண்டா’ ரக கார் ஒன்றில் அவரை இறுதியாக கண்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் சைபர் ஜெயாவில் உள்ள அவ்வீட்டிலிருந்து ரத்தம் வழிந்தோடுவதை கண்ட பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு  சடலத்தை கண்டதுடன் காவல் நிலையத்தில் தகவல் வழங்கினர் என சிலாங்கூர் மாநில காவல்படை தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடீன் தெரிவித்தார்.

அவ்வீட்டில் சித்தி கரினா ஆடை களைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தார். அவரின் உடலில் தலை, கழுத்து, நெஞ்சு பகுதிகளில் காயங்கள் உள்ளன. அவர் சுமார் 4 அல்லது 5 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என காவல் துறை சந்தேகிக்கின்றது.

மேலும் அவரிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் காணாமல் போகவில்லை, திருடர்கள் வீட்டை உடைத்து  உள் நுழைந்ததற்கான அடையாளமும் ஏதும் இல்லை. எனவே அவரை  கொள்ளை சம்பவத்திற்காக கொலை செய்ய வில்லை என தெரிகிறது.

அந்த அடுக்குமாடி வீட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிரா காணொளி பதிவின் அடிப்படையில் 38 வயதுடைய பாக்கிஸ்தான் பிரஜையான ஆடவன் ஒருவனையும் 35 வயதுடைய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்மணியையும்  கைது செய்துள்ளோம்.

மேலும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அலிவாஜுவான் கில்பெர்தாலோவோனி  என்ற   நபரையும் காவல் துறை தேடி வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இம்மூன்று நபர்களும் தலைநகரில் உள்ள ‘லவ் யாட்’ பேரங்காடியில் கைத்தொலைபேசி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. கொலை சம்பவத்திற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. கடத்தல், கற்பழிப்பு என பல கோணங்களில் இக்கொலையை விசாரித்து வருகின்றோம் என்றும்  டத்தோ நூர் அஸாம் ஜமாலுடீன் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker