Latestமலேசியா

திடீர்ப் பொதுத் தேர்தலா? ரசாலி கருத்துக்கு பக்காத்தான் கண்டனம்!

கோலாலம்பூர், மே. 18- நாட்டில் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்திருக்கும் கருத்தை பக்காத்தான் தலைவர்கள் நிராகரித்தனர். இன்னமும் பக்காத்தான் அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவை கொண்டு செயல்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

துங்கு ரசாலியின் இந்தக் கருத்து அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கலாம் என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் மார்ஷுகி யஹ்யா தெரிவித்தார்.

சொந்தத்தொகுதியிலும் கட்சிக்குள்ளும் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கு அப்படியொரு திடீர் பொதுத் தேர்தல் அவருக்கு தேவைப் பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் திடீரென பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்பதால் அம்னோ இதர கட்சிகளுடன், குறிப்பாக பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்க வேண்டும் என்று துங்கு ரசாலி அண்மையில் கருத்து வைத்திருந்தார்.

துங்கு ரசாலியின் அறிக்கை பற்றி நாம் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் தியன் சுவா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசு இன்னமும் பெரும்பான்மை கொண்டிருக்கும் நிலையில் அப்படி ஒரு பொதுத் தேர்தல் தேவைதானா? என்று அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு கேள்வி எழுப்பினார்.

அம்னோவுக்கு இப்போது பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. எனவே, அவர்கள் உணர்ச்சிமயமான பிரச்சினைகளைப் பேசி, மலாய்க்காரர்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுவதில் குறியாக இருக்கிறார்கள். இந்நிலையில் மலேசியர்கள் யாரும் பொதுத் தேர்தல் பற்றிய ஆர்வத்துடன் இருக்கவில்லை. கட்சிக்குள் நிலவும் நெருக்கடி பற்றிய கவனத்தைத் திசை திருப்புவதற்காக துங்கு ரசாலி அவ்வாறு பேசி இருக்கலாம் என்றார் அவர்.

எனினும் அரசியலில் எதுவும் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது என்று அம்னோவின் துணைத் தலைவரான முகம்மட் ஹசான் கருத்துரைத்திருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker