Latestமலேசியா

பேரரசரின் தந்தையார் சுல்தான் அகமட் ஷா காலமானார்!

குவாந்தான், மே 22 – பகாங்கின் சுல்தான் படுக்கா ஆயாண்டா சுல்தான் அகமட் ஷா அல்-முஸ்தாயின் பில்லா இப்னி அல் மாஹ்ரும் சுல்தான் அபு பாக்கார் ரியாதுடின் அல்-முவாட்சாம் ஷா இன்று காலமானார் என அறிவிக்கப்பட்டது.

சுல்தான் அகமட் ஷா இன்று, மே 22ஆம் தேதி காலை 8.50 மணியளவில் காலமானதாகப் பகாங் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தார். அவருக்கு வயது 88 ஆகும்.

பகாங்கின் முன்னாள் சுல்தானாக இருந்த அவர், 1930ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி பெக்கான் இஸ்தானா மங்கா துங்காலில் பிறந்தார்.  அவர் சுல்தான் அபு பாக்காருக்கும் தெங்கு அம்புவான் பத்தீமாவுக்கும் பிறந்த ஒரே ஆண் பிள்ளையாவார்.

கோல கங்சார் மலாய் கல்லுரியின் தொடக்கக்  கல்விக்குப் பின்னர், ஆக்ஸ்பர்ட்டின் வோர்செஸ்டர் கல்லூரி மற்றும் எக்ஸெட்டர் பல்கலைக்கத்திலும் மேற்கல்வியை மேற்கொண்டார்.

சுல்தான் அகமட் ஷா தெங்கு அம்புவான் அஃசான் தெங்கு பாங்லிமா பெராங் தெங்கு முகமட்டை 1954ஆம் ஆண்டு கரம் பிடித்தார். அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும் 5 புதல்விகளும் உள்ளனர். தெங்கு அம்புவான் அஃசான் 1988ஆம் ஆண்டு காலமானார்.

சுல்தான் அகமட் ஷா நாட்டின் 7ஆவது பேரரசராக 1979லிருந்து 1984 வரை ஆட்சி புரிந்தார். 1991ஆம் ஆண்டு அவர் சுல்தானா கல்சோம் என்பவரை மணம் புரிந்து, அவர் மூலம் தெங்கு அரிஃப் தெமெங்கோங் பகாங் தெங்கு ஃபாட் குவாட்சாமைக் மகனாகப் பெற்றிருக்கிறார்.

காலஞ்சென்ற சுல்தான்  பந்து விளையாட்டு, கோல்ப் மற்றும் போலோ விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவரின் புதல்வர் சுல்தான் பதவியை ஏற்க வகை செய்யப்பட்டது.

2019, ஜனவரி 15இல் அவரின் மூத்த புதல்வர்-சுல்தான் அப்துல்லா பகாங்கின் ஆறாவது சுல்தானாகப்  பதவி ஏற்றார். அதன் பின்னர் அவர் மாட்சிமை தங்கிய பேரரசராகவும் நியமிக்கப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker