Latestமலேசியா

இரயில் தண்டவாள சீரமைப்பு; இரு எல்.ஆர்.டி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படும்!

பெட்டாலிங் ஜெயா, மே.23 –  ஶ்ரீ பெட்டாலிங் செல்லும் எல்.ஆர்.டி. இரயில் தண்டவாளத்தின் சீரமைப்பிற்காக அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கி மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் இரு இரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளன.

பண்டார் ராயா சுல்தான் இஸ்மாயில் மற்றும் புத்ரா வாணிப மையம் (PWTC)  ஆகிய எல்.ஆர்.டி விரைவு இரயில் நிலையத்தின் தண்டவாள சீரமைப்பிற்காக, அடுத்த மாதம் ஜூன் 9,16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமை), காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை  அந்தத் தடத்தின் ரயில் சேவை தற்காலிகமாக மூடப்படும்.

மேலும், காலை 9 மணிக்கு மேல் அதன் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ரேப்பிட் கே.எல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அம்பாங் நிலையத்திலிருந்து பயணிக்கும் இரயில் இறுதியாக பண்டார் ராயா நிலையத்தில் முடிவடையும். அதே போல, பண்டார் பாரு செந்தூல் நிலையத்திலிருந்து தொடங்கும் இரயில் சேவை இறுதியாக புத்ரா வாணிக மையத்தில்  (PWTC)  முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, சுல்தான் இஸ்மாயில் நிலையத்திற்குச் செல்பவர்களுக்கு, பண்டார் ராயா மற்றும் புத்ரா வாணிப மையம் நிலையத்திலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த இலவச பேருந்துச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரேப்பிட் கே.எல் அறிவித்துள்ளது.

அத்துடன், தண்டவாளத்தை சீரமைக்க பயன்படுத்தப்படும் பொருள்களை ஏற்றி இறக்குவதற்காக ஜாலான் மெர்பாத்தியில் உள்ள சாலைகள் அந்த மூன்று நாள்களுக்கு காலை 5 மணி வரை மூடப்படும். ஆகவே, ஜாலான் மெர்பாத்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சோங் வா சீனப்பள்ளியின் முன்புரம் உள்ள பொது கார் நிறுத்தும் இடத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த இரு இரயில் நிலையங்களிலும் கூடுதல் ரேப்பிட் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். மேலும், கிளானா ஜெயா, எம்ஆர்டி மற்றும் மொனோரயில் ஆகிய  இரயில்களின் சேவை  வழக்கம் போல் செயல்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker