Latestமலேசியா

காவல் துறை முறையாக விசாரணை நடத்தும்! – அஸ்மின் அலி நம்பிக்கை

ஷா ஆலம், ஜூன்.14- தன்னை சம்பந்தப்படுத்தி பேசப்பட்டு வரும் ஓரின சேர்க்கை உறவு காணொளி விவகாரத்தில் காவல் துறையினர் நேர்த்தியாகவும் முறையாகவும் விசாரணை மேற்கொள்வர் எனப்  பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் நோன்பு பெருநாள் உபசரிப்பில் கலந்து கொண்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது, இவ்விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் கைது செய்யப்பட்டது குறித்து அவரிடத்தில் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் தரும் வகையில் , நான் காவல் துறையினர் நடவடிக்கைகளில் தலையிட விரும்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகளை அவர்கள் முறையாகவும் நேர்த்தியாகவும் கையாளுவர் என நான் நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் தன்னை பணி ஓய்வில் செல்ல வேண்டும் என “Otai Reformasi” எனும் அமைப்பு (டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவானது) வலியுறுத்தி வருவது குறித்து அஸ்மின் அலி கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இருப்பினும், இவ்விவகாரத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரதமருக்கு அவர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக, தேவையற்ற அவதூறுகளை பரப்பி சுய லாபம் தேடிக் கொள்ளும் சாக்கடை அரசியல் குறித்த பிரதமரின் நிலைபாட்டினை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேர்மையான – தூய அரசாங்கத்தை வழி நடத்துவோம் என்ற நம்பிக்கையை மக்கள் பக்காதான் ஹராப்பான் கூட்டணி மீது வைத்துள்ளனர். இது போன்ற சாக்கடை அரசியலில் நாம் ஈடுபடுவதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்றும் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெளிவுப் படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker