Latestமலேசியா

ஸம்ரி வினோத் மீதான நடவடிக்கை: ஏன் இவ்வளவு தாமதம்? -அருண் துரைசாமி


கோலாலம்பூர், ஜூன்.16-
பல புகார்கள் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட போதிலும் சமய போதகர் ஸம்ரி வினோத் மீது இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது ஏன் என்று மலேசிய இந்து ஆகம அணி அமைப்பு தலைவர் அருண் துரைசாமி கேள்வி எழுப்பினார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம், ஸம்ரி வினாத் இந்து சமய கடவுள்களை இழிவுப்படுத்தும்  வகையில் பொது வெளியில் உரை நிகழ்த்தியுள்ளார். இந்த உரை குறித்த காணொளிகள் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி நாடு தழுவிய அளவில் சுமார் 1,100  போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.

இதனையடுத்து ஏப்ரல் 28ஆம் தேதியன்று ஸம்ரி வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனர். சுமார் 3 நாட்கள் விசாரணைக்கு பிறகு மே  1ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தகவல் ஆவணத்தை காவல் துறையினர் கடந்த மே7ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பித்தனர். ஆனால் மேலும் இரு சாட்சிகளின் வாக்குமூலம் தேவை என கோரி சட்டத்துறை அலுவலகம் ஆவணத்தை திருப்பி அனுப்பியது.

 

இதனால், காவல் துறையினர் அந்த வாக்குமூலங்களையும் பெற்று ஆவணத்தை முழுமைப்படுத்தி மீண்டும் மே 27ஆம் தேதியன்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர் என நம்பத்தக்க  தரப்பிடமிருந்து கேள்வியுற்றதாக அருண் விவரித்தார்.

 

இந்நிலையில் ஆவணங்கள் கிடைக்கப் பெற்று சுமார் 1 மாதம் ஆகப் போகின்றது. ஆனால் இதுவரை ஸம்ரி வினோத் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை.  ஆனால் பங்கி சங்கர் உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

 

இது சட்டத்துறை அலுவலகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றது போல் சித்தரிக்கின்றது.  ஸம்ரி வினோத் விவகாரத்தில் அவர்கள் ஏன் மெத்தனப் போக்கை காட்டுகின்றனர்?

ஏற்கெனவே ஸம்ரி வினோத் மீது முன்னதாக பல குற்றங்கள் புகார் செய்யப்பட்டுள்ளன. ஆனால்  அதற்கும் இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் முழுமைப்படுத்தப்படவில்லை. அதே போல் இம்முறையும் ஏற்படுமா? போன்ற பல கேள்விகளை அவர் முன் வைத்துள்ளார்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் விவாதிக்க நாளை நான் சட்டத்துறை அலுவலகத்திற்கு செல்லவிருக்கின்றேன். ஒரு வேளை அங்கு எனக்கு இந்த தாமததிற்கான காரணம் விவரிக்கப்படவில்லை என்றால் எங்கள் அமைப்பு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் அருண் உறுதியளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker