Latestமலேசியா

எம்ஏசிசி தலைவராக லத்தீப்பா கோயா நியமனம்: கொண்டாடிக் குதூகலிக்கிறது கேரளா!

கோலாலம்பூர், ஜூன் 20- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவராக நியமிக்கப்பட்ட லத்தீப்பா கோயாவிற்கு இங்கு (மலேசியாவில்) பல எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பிய நிலையில் அவர் மலையாள வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்தியா கேரளாவில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

அவரின் பதவி நியமனம் குறித்து அங்குள்ள ஊடகங்கள் பிரத்யேக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக லத்தீப்பா குறித்த “நியூஸ்60. இன்” ஊடகத்தின் செய்தி தொகுப்பு காணொளி தற்பொழுது சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்ட வருகிறது.

சுமார் 2 நிமிடங்கள் 53 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் பெண்மணி ஒருவர் மலையாள மொழியில் பேசுகின்றார். அதில் லத்தீப்பா கோயாவின் பூர்வீகம், அவரின் பெற்றோர்கள் குறித்த தகவல்களை அவர் விவரிக்கின்றார்.

மேலும் கேரளாவில் பிறந்த மலையாள வம்சாவளியைச் சேர்ந்த அவர், மலேசியாவின் உயர்ந்த அரசு பதவியில் அமர்ந்துள்ளது மிகவும் பெருமை அளிக்கிறது என குறிப்பிடும் அப்பெண்மணி,  லத்தீப்பா கோயாவை இப்பதவியில் அமர்த்திய மலேசிய பிரதமர் துன் மகாதீரும் மலையாள வம்சாவளியை சேர்ந்தவர் தான் என்றும் கூறுகின்றார்.

இதற்கிடையே லத்தீப்பா கோயா 1973ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.  அவர் மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டார் என்று இணையத்  தகவல் கூறுகிறது.

கடந்த 1997ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர், பல வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளர். அவர் கடந்த 2011ஆம் ஆண்டு பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரனுடன் இணைந்து Lawyers for Liberty (LFL) எனும் இயக்கத்தை தொடங்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிகேஆர் கட்சியில் அடைப்படை உறுப்பினராக இருந்து வந்த லத்தீப்பா, அக்கட்சியின் இளைஞர் பகுதி தகவல் பிரிவு தலைவர்- கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஷுக்ரி அப்துல்  ராஜினாமா செய்ததை அடுத்து,  துன் மகாதீர் அப்பதவிக்கு லத்தீப்பா கோயாவை நியமித்தார்.

இந்த நியமனத்திற்கு பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரை அப்பதவியில்   நியமிக்க தனக்கு முழு அதிகாரம் உண்டு என பிரதமர் துன் மகாதீர் திட்டவட்டமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker