Latestமலேசியா

ஸம்ரி விநோத்தின் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? – அருண் துரைசாமி கேள்வி

கோலாலம்பூர், ஜூன் 28 – இந்து சமயத்தைக் கேவலமாக விமர்சித்த ஸம்ரி விநோத்தின் மீது சட்டத்துறை அலுவலம் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனத்தைக் காட்டுவதாக  மலேசியா ஆகம அணி குற்றம் சாட்டியுள்ளது.

இதனை எதிர்த்து தமது அணி ஜூலை 5ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் சட்டத்துறை அலுவலகத்தில் மகஜர் ஒன்றை வழங்கும் என அந்த அணியின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்ததாக மலேசியக்கினியின் வாட்ஸ் அப் செய்தி ஒன்று கூறுகிறது.

ஏப்ரல் 26ஆம் தேதி சிம்பாங் பூலாயில் ஸம்ரி விநோத் மீது புகார் தெரிவிக்கப்பட்ட பின்னர்,  27ஆம்  தேதி அது பற்றிய கோப்பு திறக்கப்பட்டு,  28ஆம் தேதி ஸம்ரி விநோத் பெர்லிஸ் ஆராவில் கைது செய்யப்பட்டார்.

நான்கு நாள்களுக்குப் பின்னர், மே1ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டு,  மே 7ஆம் தேதி போலீசார் விசாரணை அறிக்கையை சட்டத் துறை அலுவலகத்துக்கு அனுப்பினர்.

சட்டத்துறை அலுவலகம் மேலும் விளக்கம் கேட்டு அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பிய பின்னர்,  போலீசார் அதற்கான விளக்கத்தோடு குற்றம் சாட்டக்கூடிய விதிகளையும் இணைத்திருந்தது.

ஜூன் 12இல் நடத்தப்பட்ட கூட்டத்தில் அந்த  புகார் விவரங்களை சிலாங்கூர் போலீஸ் துறை தங்களிடம் கேட்டிருந்ததாக அருண் துரைசாமி குறிப்பிட்டார். இதற்கு முன்னர் அது சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட புகார் என்னவானது  என்பது புரியவில்லை.

ஜூல 5, வெள்ளிக்கிழமை அது பற்றிய  மகஜர் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜூன் 26ஆம் தேதி அந்த அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஸம்ரி விநோத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் புகார் கொடுத்திருந்தனர். அவர்களுக்கு  மரியாதை தரப்படவில்லை.  ஸம்ரி மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து தகுந்த விளக்கத்தைத் தந்தால் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் மகஜர் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்திக் கொள்ளப்படும்.

இந்நிலையில் சமய நிந்தனை சம்பந்தமாக முஸ்லிம் அல்லாதோரின் புகார்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதை தமது அணி சுட்டிக்காட்டுவதாவும், சட்டம் என்பது இனம், சமயம் மற்றும் தரா தரத்துக்கு உட்பட்டது அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும்  அருண் துரைசாமி குறிப்பிட்டார்.


‘புதிய மலேசியா’ என வாய் கிழியப் பேசுவதில் பயனில்லை. எந்தச் சமயத்தையும் கீழ்த்தரமாக விமர்சிப்போருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

மற்ற சமயங்களை இழிவு படுத்திப் பேசும் அநாகரிக சமய போதகர்கள், அவர்களின் சீடர்களுக்கு அரசு தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டுமென அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker