Latestஉலகம்

இலங்கை குண்டு வெடிப்பு – போலீஸ் தலைவர் & அமைச்சு செயலாளர் கைது !

கொழும்பு, ஜூலை.3- கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயம், ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்களை முன்னமே தடுக்க தவறியதாக ஶ்ரீலங்கா காவல்படையின் தேசிய தலைவரும்  தற்காப்பு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இத்தகவலை அந்நாட்டு காவல் படை பேச்சாளர் ருவான் குணசேகரா உறுதிப்படுத்தினார்.

புனித வெள்ளி தினத்தன்று நிகழ்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் மொத்தமாக 250 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய தீவிரவாத கும்பல் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்றது. இந்தியா உளவுத்துறையும் இச்சம்பவம் குறித்து முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த சம்பவங்களை முன்னமே அறிந்து கொண்டு அதனை தடுத்து நிறுத்த போதிய வசதிகள் இருந்த போதிலும் அதனை தவற விட்டதாக காவல்படையின் தேசிய தலைவர் புஜித் ஜெயசுந்தரா,  தற்காப்பு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹேமாசிரி பெர்ணாண்டோ ஆகியோர் குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவ்விருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொழுதே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன.  சட்டத்துறை தலைவர் டப்புலா டீ லிவேரா இந்த கைது நடவடிக்கைகளுக்கு ஆணை பிறப்பித்தார்.  அதன் அடிப்படையில் ”மனிதத்திற்கு எதிரான குற்றங்கள்” உட்பட பல குற்றச்சாட்டுகள் இவ்விருவரின் மீதும் முன் வைக்கப்பட்டது என்றும் ருவான் விவரித்தார்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படும் முதல் இரண்டு அரசு அதிகாரிகள் இவர்களாவர். முன்னதாக இந்த தாக்குதல் சம்பவங்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற சிறப்பு குழுவினரிடம் இவ்விருவரும்  முன்நிறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களின் தவறை ஏற்க மறுத்தனர்.

ஶ்ரீ லங்கா அதிபர் சிரிசேனா தன்னை இக்குற்றச்சாட்டினை ஏற்று பதவி விலக சொல்லியதாக புஜித் ஜெயசுந்தரா இந்நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்திருந்தார்.

அப்பதவிக்கு பதிலாக வேறு ஒரு அரசு பதவியை வழங்குவதாகவும் அதிபர் தன்னிடம் வாக்குறுதி அளித்ததாகவும், தாம் பதவி விலக மறுத்ததை அடுத்த கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது என்றும் அவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker