Latestமலேசியா

இணையத்தில் 2 வாரங்களாக அறிமுகமான நபரிடம் 40,250 வெள்ளியை இழந்த பெண் !

சிபு, ஜூலை. 10- இணையத்தில் பொருட்கள் வியபாரம் செய்து வரும் பெண்மணி ஒருவர் இரு வாரங்களாக அறிமுகமான நபரிடம் 40,250 வெள்ளியை
இழந்துள்ளார்.

கடந்த ஜூன் 18ஆம் தேதி அப்பெண்மணிக்கு சமூக வலைத் தளத்தில் நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்நபர் தன்னை கொரிய நாட்டின் பிரஜை
என்றும் தற்பொழுது இங்கிலாந்தில் வேலை செய்து வருவதாகவும் அறிமுகம் செய்துள்ளான். பின்னர் இலகுவாக தொடர்பு கொள்ள வேண்டி அவன், அப்பெண்மணியின்
கைப்பேசி தொடர்பு எண்ணை பெற்றுள்ளான். இவ்விருவருக்கும் உறவு தொடர்ந்தது.

இரு வாரங்கள் கழிந்து அந்நபர், பிறந்த நாளை முன்னிட்டு அப்பெண்மணிக்கு தங்க சங்கிலி, விலையுயர்ந்த கைப்பை, கைக்கடிகாரம் ஆகியவற்றை பரிசாக
பார்சலில் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளான்.

இந்நிலையில் கடந்த ஜூலை 2ஆம் தேதி அப்பெண்மணியை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தன்னை கொரியர் நிறுவனத்தின் அதிகாரி என அறிமுகப்படுத்தி
கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சான்றிதழ், உள்ளூர் கட்டணங்கள், சுங்க அனுமதி கட்டணம் ஆகியவற்றிற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அந்த
பார்சல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அந்த பார்சலை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி அவர் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் வங்கி கணக்கு எண்ணையும் வழங்கியுள்ளார். இதனை
நம்பி அப்பெண்மணி அந்த வங்கி கணக்கில் 8 முறை பணம் செலுத்தியுள்ளார்.

அவர் தனது வியபார பணம் மட்டுமல்லாது பெற்றோர்களிடமும் கடன் வாங்கி இந்த தொகையை வழங்கியுள்ளார் என சிபு ஒசிபிடி துணை ஆணையர் ஸ்டென்லி
ஜொனத்தன் விவரித்தார்.

ஆனால் இது மோசடி வேலை என தமது சகோதரி கூறியதும் அப்பெண்மணி அந்நபரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் தொடர்பு கிட்டவில்லை.
இதனையடுத்து அவர் கடந்த ஜூலை 9ஆம் தேதி போலீசில் புகார் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை மோசடி சட்டம் செக்‌ஷன் 420 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் ஸ்டென்லி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker