Latestமலேசியா

மகளுக்காக தவிக்கும் இந்திராவின் அவலம்; திரைப்படம் ஆகிறது!

கோலாலம்பூர், ஜூலை. 12- குடும்ப மாதான இந்திரா காந்தியின் கணவர் மதம்மாறியத்தை அடுத்து பதினொரு மாத குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பிரசனா டிக்ஸா, தற்போது எங்கே இருக்கிறார் என்ற விபரம் தெரியாத நிலையில் அவருடைய கதை விரைவில் திரைப்படமாகி தியேட்டர்களில் வெளியிட இருக்கிறது.

இங்காட் எனப்படும் இந்திரா காந்தி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை குழு இதனை அறிவித்துள்ளது. தற்காலிகமாக படத்திற்கு ‘பிரசனா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மதம் மாறி விட்ட கணவரான முகம்மட் ரிடுவான் அப்துல்லா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிரசனாவை கடத்தி விட்ட நிலையில், இதுவரையில் தான் பெற்ற பிள்ளையை இந்திரா காந்தி மீண்டும் சந்திக்கவே முடியவில்லை.

ஒரு தாயின் இந்த அவலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப் படுகிறது . குழந்தையை கண்டுபிடிக்கும்படி இங்காட் அமைப்பு பல போலீஸ் புகார்களை செய்துள்ளது. எனினும் சிறப்பு போலீஸ் படையினரிடம் இருந்து எந்த நிலவரம் தெரியவில்லை என்று இங்காட் அமைப்பின் தலைவரான அருண் துரைசாமி தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக தாங்கள் செய்த புகாரில், ரிடுவான் அப்துல்லா, திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைகளுக்கு தந்தையாக கிளந்தானில் தான் வாழ்ந்து வருகிறார் என்பதை சுட்டிக்காட்டி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மேலும் ரிடுவான் அப்துல்லா, அவரது இதர குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார் என்ற தகவலையும் போலீசுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். எனினும் இதுவரை எந்தப் புலன் விசாரணையையும் நடந்ததாக தெரியவில்லை.

இந்த விசாரணை நிலவரம் குறித்து ஆகக் கடைசியான நிலவரத்தை அறிந்துகொள்ள போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோரை சந்திப்பதற்கான தேதிக்காக காத்திருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.

இதனிடையே அருண் துரைசாமியின் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த ஹுஷீர் முகம்மட் தெரிவித்தார்.

இது தொடர்பாக இங்காட் அமைப்பு வழங்கிய தகவல்கள் என்ன என்பதை அடுத்த வாரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker