Latestமலேசியா

நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு !

கோலாலம்பூர், ஜூலை.17- நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்ற உரிமை & சலுகை குழுவினை எதிர்கொள்ள தேவையில்லை என சபாநாயகர் டத்தோஶ்ரீ முகமட் அரீப் முகமட் யூசோப் அறிவித்ததை அடுத்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முந்தைய தேசிய முண்ணனி அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் சுமார் 15 மில்லியன் வெள்ளி ஜிஎஸ்டி கட்டணம் “திருடப்பட்டுள்ளது “ என லிம் குவான் தெரிவித்தது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிர்மனு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் லிம் குவான் எங் நாடாளுமன்ற உரிமை & சலுகை குழு முன் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. நான் எனது தீர்ப்பை வழங்கியுள்ளேன், எனது முடிவு இறுதியானது. நீங்கள் விரும்பினால் விவாதிக்க பொது கணக்குக் குழு (பிஏசி) அறிக்கைக்கு தனித் தீர்மானத்தை தாக்கல் செய்யலாம் என இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்த பிஏசி அறிக்கையை நான் படித்தேன். செலுத்தப்படாத ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி லிம் குவான் எங் முன்வைத்த வாதங்களில் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருப்பினும் அவரின் கருத்தினை ஏற்க மறுத்த இஸ்மாயில் சப்ரி, இந்த விவகாரத்தில்  “கொள்ளையர்”, “திருடியது”  போன்ற வார்த்தைகளை லிம் குவான் எங் பயன்படுத்தியுள்ளார்.

அவரை நேரடியாக நாடாளுமன்ற உரிமை & சலுகை குழு முன் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் முன்வைத்த தீர்மானம் விசாரிக்கப்பட்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம் என கருத்துரைத்தார்.

ஆனாலும் சபாநாயகர் தமது முடிவில் உறுதியாக இருந்தை தொடர்ந்து கூட்டத் தொடரில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் கூட்டத்திற்கு திரும்பினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker