Latestமலேசியா

அன்வார்-அஸ்மின் மோதல் ; நாட்டின் அரசியல் திருப்பத்திற்கு வித்திடுமா?

கோலாலம்பூர், ஜூலை.18-   பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி அண்மையில் சமூக தளங்களில் வெளி வந்த காணொளி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக உருவெடுத்து இன்று நாட்டின் அரசியல் வட்டாரத்தில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த விவகாரத்தினால் நீண்ட காலமாக அரசியலில் ஒன்றாக பயணித்த டத்தோஶ்ரீ அன்வாரும் அஸ்மின் அலியும் தற்பொழுது கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் நாட்டில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திடும் என்று கூறப்படுகின்றது.

கடந்த மாத துவக்கத்தில் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என கூறி ஒரின சேர்க்கை உறவு காணொளி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டது. அதன் பின் அந்த காணொளியில் இருப்பது நானும் அமைச்சர் அஸ்மின் அலியும்தான் என மூலத் தொழில்துறை துணையமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் முகமட் ஹாஸிக் காணொலி மூலம் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து இது சம்பந்தப்பட்ட மேலும்  சில காணொளிகளும் உரையாடல் பதிவுகளும் வெளியிடப்பட்டன. தலைமறைவான முகமட் ஹாஸிக் மணிலாவிற்கு புறப்பட்டபோது போலீசால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இந்த காணொளி குறித்து போலீஸ் விசாரணையும் தொடங்கப்பட்டது.

முதலில் விசாரணை சுணக்கமாக இருந்தாலும் பிறகு தீவிரமடைந்தது. இதன் அடிப்படையில் அண்மையில் முகமட் ஹாஸிக், அன்வாரின் அரசியல் செயலாளர் பர்ஹாஷ் வாஃபா உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த காணொளி விவகாரத்தில் போலீஸ் விசாரணை முடிவு கிடைத்த பின்னர் தான் முடிவேதும் எடுக்க முடியும் என கூறி வந்த டத்தோஶ்ரீ அன்வார் நேற்று முற்றிலும் மாறுபட்ட கருத்தினை முன் வைத்தார்.

இந்த காணொளியில் அஸ்மின் சம்பந்தப்பட்டிருப்பது உண்மையானால் அவர் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அன்வார் கருத்துரைத்தார். இந்த கூற்றுக்கு பதில் தந்த அஸ்மின் அலி, என்னை கூறும் முன் நீங்கள் முதலில் கண்ணாடியை பார்த்துக் கொள்ளுங்கள் என அன்வாரை குறிப்பிட்டார்.

இவர்களின் இந்த கருத்து மோதல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் இருவருக்குமான அரசியல் மோதல் சில காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த வேளை அது  தற்பொழுது வெளிப்படையாகவே வெடித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

அதற்கேற்ப, இந்த காணொளி விவகாரத்தை பயன்படுத்தி அஸ்மின் அலியை வீழ்த்த அரசியல் முன்னெடுப்புகள் உருவாகியுள்ளன என பிரதமர் துன் மகாதீரும் நேற்று கருத்துரைத்திருந்தார்மேலும் அஸ்மின் அலி விடுப்பில் செல்வது குறித்து அவரே முடிவெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த நிலைப்பாடு அவர் அஸ்மின் அலிக்கு தான்  ஆதரவாக உள்ளார் என்பதை தெளிவுப்படுத்துகின்றது. கூடிய விரைவில் பிகேஆர் கட்சியின் துணை தலைவரான அஸ்மின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு சேர்ந்து பி.கே.ஆர் கட்சியிலிருந்து வெளியேற உள்ளார் என்ற ஆருடமும் பரவி வருகின்றது.

இந்த விவகாரங்கள் ஒரு புறம் வெடித்துக் கொண்டிருக்கையில், அந்த ஓரின சேர்க்கை வீடியோ போலியானதல்ல. அது அசலாக பதிவு செய்யட்டதுதான் . ஆனால் அந்த காணொளியில் இருக்கும் நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் இன்று அறிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இனி அடுத்தடுத்து வரப்போகும் நிகழ்வுகளும் கருத்து மாற்றங்களும் மலேசிய அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வளர்கள் கூறுகின்றனர்

அன்வார்அஸ்மின் அலி இடையிலான மோதல் எது வரை சென்று அரசியல் மாற்றங்களை உண்டாக்கும் என்பதை பொருத்திருந்துதான் காண வேண்டும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker