Latestமலேசியா

“கடாரம் கொண்டான்” திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ; என்ன காரணம் ?

கோலாலம்பூர், ஜூலை.22- ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடுக் காத்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவான “கடாரம் கொண்டான்” திரைப்படம் மலேசியாவில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளர். இத்திரைப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசனும் முக்கிய வேடமேற்றிருந்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் நடைப்பெற்றது. மேலும்”கடாரம் கொண்டான்” என்ற பெயர் கெடா மாநிலத்தையும் இராஜேந்திர சோழ மன்னனையும் குறிக்கிறது என பேசப்பட்டதால் மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

அதற்கு ஏற்றார் போல் அண்மையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் ‘டிரைலர்’ மிகவும் பிரமாண்டமாக இருந்தது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியது.

இந்நிலையில் இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு கண்டது. ஆனால் மலேசியாவில் மட்டும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மலேசிய வெளியிட்டாளர்கள் லோட்டஸ் பைவ் ஸ்டார் ஏவி நிறுவனம் கடந்த 19ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவிப்பினை செய்தது.

அதில் மலேசிய திரைப்பட தணிக்கை குழுவின் உத்தரவுப்படி இத்திரைப்படம் மலேசியாவில் வெளியீடு காணாது என கூறப்பட்டுள்ளது.  இதனால் மலேசிய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குறிப்பாக “கடாரம் கொண்டான்” என்ற தலைப்பு, அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏதும் இத்திரைப்படத்தில் உள்ளதா என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்க துவங்கினர். இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பு இத்திரைப்படத்திற்கான காரணத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் சில மலேசிய ரசிகர்கள், இத்திரைப்படத்தை வேறு நாடுகளில் பார்த்து விட்டதாகவும் அதில் மலேசிய காவல்துறையை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் சமூக வலை தளங்களில் கருத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிய வணக்கம் மலேசியா லோட்டஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker