Latestமலேசியா

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி – அமிருடினை அகற்ற சதியா?

பெட்டாலிங் ஜெயா, ஆக. 8 – ஒருதலைப் பட்சமாக மதம் மாற்றப்படும் சட்டத்தில் கூட்டரசு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிலாங்கூரில் சட்டத் திருத்தம் கொண்டுவரும் மந்திரி பெசாரின் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.

தம்பதியரில் ஒருவர் மதம் மாறி பிள்ளைகளை மதம் மாற்ற, மற்றவரின் சம்மதத்தைப் பெற வேண்டுமென கூட்டரசு நீதிமன்றம் இந்திரா காந்தியின் வழக்கில் தீர்ப்பளித்திருந்தது.

அதற்கு மாறாக, தந்தை, தாய் இருவரில் ஒருவர் நினைத்தல் பிள்ளைகளை மதம் மாற்ற முடியும் என மாநில ஷரியா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மந்திரி பெசார் அமிருடின் ஷாரி முனைப்பு காட்டி வருகிறார். இது மாநிலத்தில் உளள மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறும் நடவடிக்கை என பலரும் விமர்சித்துள்ளனர்.

மேலும், அஸ்மின் அலி பாலியல் ஆபாச வீடியோவில் சம்பந்தப் பட்ட விவகாரம் சூடி பிடித்த பின்னர், ஏதோ உள்நோக்கமாக இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுதாகப் பரவலான சந்தேகம் எழுகிறது.

மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது, மத சம்பந்தமான விவகாரம் பலரின் அதிருப்தியைக் கொண்டுவரும் என பலரும் எச்சரித்துள்ளனர்.

இதில் மாநில மலாய்க்காரர்கள் அல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஜசெகவுக்குப் பெரும் தலைக்குனிவைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. அதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் கூட வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அது பற்றி விவாதிக்க அமிருடின் ஷாரி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென நெருக்குதலும் கொடுக்கப்பட்டு வருகிறது. .

அமிருடின் ஷாரி இவ்விவகாரத்தில் விடாப்பிடியாக, தீவிரமாகச் செயல்பட்டால், அவரை மந்திரி பெசார் பதவியில் இருந்து அகற்றி, அன்வார் இப்ராஹிமிற்கு நெருக்கமான இட்ரிஸ் அகமட்டை புதிய மந்திரி பெசாராகக் கொண்டுவரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு முன்னர் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகிய போது, இந்த இட்ரிஸ் அகமட்டே மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என ஆரூடம் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker