Latestமலேசியா

அயர்லாந்து பெண் நோரா – உடல் கண்டுபிடிக்கும் வரையிலான சம்பவங்கள்

கோலாலம்பூர், ஆக. 14 – அயர்லாந்து சிறுமி நோரா ஆன் குவோரின் ஆகஸ்டு 3ஆம் தேதி இரண்டு வார விடுமுறைக்காக நெகிரி செம்பிலான், நீலாய் டூசுன் ரிசோர்ட்டுக்கு வந்து, மறுநாள் காணாமல் போய் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அவரைத் தேடும் பணி பெரிய அளவில் முடுக்கி விடப்பட்டது. இதன் செய்திகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவரின் உடல் நேற்று, 13ஆம் தேதி பிற்பகலில் கண்டு பிடிக்கப்படும் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நடந்த சம்பவங்களின் அட்டவணை கீழ் வருமாறு:

15 வயதான, சுயமாகப் படிக்கும் ஆற்றலில் குறைபாடு கொண்ட நோரா ஆன் கூவோரின் தமது பெற்றோருடன் நீலாய் டூசுன் ரிசோர்ட்டில் ஆகஸ்டு 3இல் பதிவு செய்துள்ளார்.

மறுநாள் காலை 8 மணிக்கு அச்சிறுமி தங்குமிடத்திலிருந்து காணாமல் போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அதில் போலீசார், தீயணைப்பு, மீட்புக் குழுவினர் மற்றும் மோப்ப நாய் பிரிவு ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

ஆகஸ்டு 5ஆம் தேதி, நோராவைத் தேடும் பணி தங்கும் விடுதியில் இருந்து 12 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு விரிவு படுத்தப்பட்டது. நோரா கடத்தப் பட்டதாகக் கூறப்படுவதை மறுத்த போலீசார், அவர் காணாமல் போன நபர் எனும் ரீதியில் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மறுநாள், தரை மார்க்கமாக நோராவை தேடும் நடவடிக்கைக்கு உதவ, வான் வெளியிலிருந்து தேடும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டது.

தேடும் நடவடிக்கை பலனளிக்கத் தவறியதால், தேடும் வட்டாரம் மலையும் அருகில் இருக்கும் ஆறும் அதில் உள்ளடக்கப்பட்டன.

ஆகஸ்டு 8ஆம் தேதி நவீன ஆளில்லா விமானத்தின் மூலம் நோராவை தேடும் நடவடிக்கை தொடங்கியது. நோராவின் குடும்பத்தினரின் குரல் பதிவு ஒலிபெருக்கியின் மூலம், விமானத்தின் வழியாக ஒலிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 9ல் 9 ஆளில்லா விமானங்களில் உடல் வெப்பத்தைக் கொண்டு மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் சாதனம் பொருத்தப்பட்டு, தேடும் நடவடிக்கை தொடர்ந்தது.

அதற்கு அடுத்த நாள், ஆகஸ்டு 10ஆம் தேதி, தேடும் நடவடிக்கையில் 317 பேர் ஈடுபடுத்தப்பட்டு, தேடும் இடம் தங்குமிடத்திலிருந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் குறைக்கப்பட்டது.

ஆகஸ்டு 11ஆம் தேதி, பொதுமக்கள் நோராவை பற்றிய தகவல் கொடுக்க, 0111-2285058 எனும் ஹோட் லைன் தொலைபேசி ஒன்று திறக்கப்பட்டது.

ஆகஸ்டு 12ஆம் தேதி, தேடுதல் நடவடிக்கைக்கு உதவும் பொருட்டு, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நிபுணர்களும் நடவடிக்கைக் குழுவில் இணைந்தனர்.

அதே வேளையில், நோரா சம்பந்தமான விவரம் அளித்து உதவுவோருக்கு 50,000 ரிங்கிட் வெகுமதி வழங்குவதாக நோராவின் குடும்பத்தினர் அறிவித்தனர்.

ஆகஸ்டு 13ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.57 மணிக்கு, தங்குமிடத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் சிதைந்த உடல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

நீலாய் மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட உடலை நோராவின் பெற்றோர் அடையாளம் காட்டினர்.

இந்தத் தேடும் நடவடிக்கையில் போலீஸ் துறை, தீயணைப்பு, மீட்புக் குழு, பொது தற்காப்புப் பிரிவு, ரேலா, மாநில வன இலாகா, சாப்புரா நிறுவ ஊழியர்கள், பூர்வகுடிகள், செராஸ் கெராக்கான் பெட்டாலியன், செனோய் பிராக் எனும் இராணுவப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு, சுற்று வட்டார கிராம மக்கள், சுற்றுலா மைய ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய 313 பேர் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker