Latestமலேசியா

சரவாக் தேர்தல் நம்பிக்கை கூட்டணிக்கு வாய்ப்பை வழங்குவீர் – டாக்டர் மகாதீர்

கூச்சிங் செப் 17 – எதிர்வரும் சரவாக் சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியை தேர்ந்தெடுக்கும்படி சரவாக் மக்களுக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஜி பி எஸ் ( G.P.S ) எனப்படும் கபோங்கான் பார்ட்டி சரவாக்கிற்கு பதில் நம்பிக்கை கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தற்போது புத்ராஜெயா நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது .

ஒரே கூட்டணியாக இருந்தால் மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என டாக்டர் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் சரவாக் தேர்தலில் இப்போதைய மாநில அரசாங்கத்தை நாம் மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமாகும். இதன் வழி சரவா அரசாங்கத்தை நம்பிக்கை கூட்டணி நிர்வகிக்க முடியும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பெர்சத்து முக்கிய பங்காற்ற முடியும் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

கூச்சிங்கில் பெர்சத்து கட்சியின் உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். சரரவா வாக்காளர்கள் கடந்தகாலங்களில் பொதுவாகவே தேசிய முன்னணியை தேர்ந்தெடுத்து வந்தனர். கூட்டரசு அரசாங்கம் தேசிய முன்னணி நிர்வாகத்தில் இருந்ததே இதற்கான காரணமாகும் .

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் கூட்டரசு நிலையில் அரசாங்கம் மாறியுள்ளதால் எதிர்வரும் மாநிலத் தேர்தலிலும் சரவாவில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டரசு அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்குமிடையே ஒத்துழைப்பு மேலும் வலுவடைய முடியும். இதன்வழி மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு அர்த்தமுள்ளதாக இருக்க முடியுமென டாக்டர் மகாதீர் கூறினார்.

சரவா மாநில தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த நம்பிக்கை கூட்டணியின் பங்காளி கட்சிகளான பி கே ஆர், ஜ. செ.க, அமனா கட்சி ஆகியவற்றுடன் தீவிரமாக இணைந்து பணியாற்றும்படி பெர்சத்து கட்சியை டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

நாம் தனியாக இருந்தால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை. எனவே நமது பங்காளிகளுடன் இணைந்து கை கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று அவர் சொன்னார் .

விரும்புகிறோமோ இல்லையோ வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு நம்பிக்கை கூட்டணிக்கு இருப்பதால் அதனை உறுதிப்படுத்துவதற்கு அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கட்சியின் உறுப்பினர்களை டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

நாம் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்புடனும் இருந்தால் நமது போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker