Latestமலேசியா

செயற்கை மழைக்கு “ட்ரோன்” பயன்படுத்தப்படும்


கோலாலம்பூர்,  செப் 20 – புகைமூட்டம் பிரச்சனை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் காற்றின் தூய்மைக்கேடு ஆரோக்கியமற்ற சூழ்நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலைமையில் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக புகை மூட்டத்தில் உள்ள இடங்களில் மழை பெய்யாமல் இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு “ட்ரோன்” எனப்படும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி  செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

நாட்டில் புகை  மூட்டத்திற்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்வது  ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் வியூகத்தையும் அரசாங்கம் எடுக்க விருக்கிறது. செயற்கை மழையை பொழியவைப்பதற்கான மாற்று நடவடிக்கை இதுவாகும் என மகாதீர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் நாம் பல்வேறு செயற்கை விமானங்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் புத்ரா ஜெயாவில் செயற்கை மழையை  பொழியவைப்பதற்கு ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் பிரச்சனை மோசமடைந்திருப்பதால் அதனை சமாளிக்கும் வழி வகைகள் குறித்து பிரதமரிடம் வினவப்பட்டது. பிரச்சினை விரைவில் தீர்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம் என அவர் மறுமொழி தெரிவித்தார்.

செயற்கை மழையை  பொழிய வைப்பதற்காக மேகக் கூட்டங்களில் ரசாயன நீரை தெளிக்கும் நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்றும் டாக்டர் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இந்தோனேசியாவின் காட்டுத்தீயை  அணைப்பதற்கு மலேசியா வழங்க முன்வந்த உதவியை அந்நாடு நிராகரித்தது குறித்தும் பிரதமரிடம் வினவப்பட்டது.

தீயை அணைப்பதற்கு நீர் குண்டை  பயன்படுத்தும் விமானங்களை வழங்கி இந்தோனேசியாவுக்கு உதவுவதற்கு மலேசியா முன்வந்த போதிலும் அதனை அந்நாடு ஏன் நிராகரித்தது என்று தமக்குத் தெரியவில்லை என மகாதீர் பதிலளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker