Latestமலேசியா

பத்திரிக்கையாளரும் கவிஞருமான  அக்கினி சுகுமார் காலமானார்! ஒரு பேனாவின் இறுதி சொட்டு மை  தீர்ந்தது

கோலாலம்பூர், அக். 3-மலேசிய படைப்புலகில் நன்கு அறிமுகமான பத்திரிகையாளரும், கவிஞர், வணக்கம் மலேசியாவின் ஆசிரியருமான  அக்கினி சுகுமார் இன்று பிற்பகல்  1.40க்கு தமது இல்லத்தில் காலமானார். 64 வயதான அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

மலேசியா தமிழ் எழுத்துலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பத்திரிகையாளராகவும் படைப்பாளராகவும்,கவிஞராகவும்  மும்முனைகளில் முத்திரை பதித்த அக்கினியின் இயற் பெயர் சுகுமார் வெள்ளதுரை.

1973 ஆம் ஆண்டு இவரது தமிழ் பத்திரிக்கை  உலகம் பிரவேசம் ஆரம்பமானது. தமிழ் மலர் தினசரியில் ஆசிரியர் பகுதியில் சாதாரண ஊழியராக பணியைத் தொடங்கிய இவர் வானம்பாடி  வார இதழை உருவாக்கிய மூவரில் இவரும் ஒருவர்.

பின்னர் தமிழோசை தினசரியின் தொடக்க உறுப்பினர் என்பதோடு அதன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். மலேசிய நண்பன் நாளிதழில் செய்தி ஆசிரியராகவும், மக்கள் ஓசை வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று வகித்துள்ள அக்கினி சுகுமார் பின்னர் தமிழ்குரல் நாளிதழில் உருவாக்கத்திற்கு ஆணிவேராக இருந்ததோடு அதன் ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றிருந்தார்.  இறுதியாக வணக்கம் மலேசியா.காம்  மூத்த பத்திரிகையாசியராகவும் பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை துறையிலும் படைப்பு துறையிலும் தமக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டிருவந்தவர் அக்கினி சுகுமார். மலேசிய மண்ணில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் முன்னோடியாக விளங்கியவர் .இவரது புதுக்கவிதைகள் ஒரு தலைமுறை எழுத்தாளர்களின் எழுச்சிக்கு துணை புரிந்தது.

கனா மகுடங்கள் புதுக் கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர் பட்டுப்புழுக்கள் என்ற குறுநாவல் ஒன்றையும் ,மண்ணே உயிரே என்ற ஈழப் பயண அனுபவங்களையும் நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அரிய பேறு என்று அவர் அடிக்கடி கூறுவார்.

 

 

அவர் தமிழீழத்திற்கு சென்றிருந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடியான காலக்கட்டமாகும். பாதுகாப்பு, பயணம் என பலவேறு சிக்கல்களைத் தாண்டி அவர் செய்தியாளர் மாநாட்டில் அன்று கலந்து கொண்டார்.  அவரின்  மண்ணே உயிரை புத்தகம்  காலத்திற்கும் தடயமாக  இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதைகளுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் வழி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தவர்அக்கினி சுகுமார். ஆய்வியல், அரசியல், கலையியல்,ஆன்மிகம், விளையாட்டுத்துறை என பல்வகை கட்டுரைகளை எழுத்துலகில் அழுத்தமாகக் காலூன்றியவர்.

அறிவியல் கட்டுரைகளை தமிழில் தருவதில் அக்கினி சுகுமார் தன்னிகரற்று  விளங்கியவர். அறிவியலை எளிமைப்படுத்தி  தமிழில் அவர் வாரி வழங்கிய கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் நினைவு கூறப்படுபவை எனலாம்.

இலக்கோ எதிர்ப்போ இல்லாமல் இவரது பத்திரிகை பயணம் அன்று ஆரம்பமானது. பின்னர் நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்தது. செய்கிற பணியை செம்மையாக செய்தல் என்ற இலக்கும் எதிர்பார்ப்பும் அவரிடம் வேரூன்றியது போற்றத்தக்க விஷயமாகும்.

அன்னாரது நல்லுடல் நாளை No 45,  BP 3, Taman Bukit permata,Batu cave (68100) Selangor எனும் முகவரியில் உள்ள இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு  நல்லடக்கம் செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker