Latestமலேசியாவிளையாட்டு

உலக மகளிர் ஸ்குவாஷ் போட்டிக்கு  சிவசங்கரி ‌ தயாராகிறார்

கோலாலம்பூர்  அக் 8 – மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ்.சிவசங்கரி இம்மாத இறுதியில் கெய்ரோவில் நடைபெறவிருக்கும் உலக மகளிர் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

உலகின் பல முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் அந்த போட்டியில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளதாக  20 வயதுடைய சிவசங்கரி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அனைத்துலக ஸ்குவாஷ் போட்டிகளில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்த  தேசிய  ஸ்குவாஷ் வீராங்கனையான  நிக்கோல் டேவிட் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரது இடத்தை சிவசங்கரி நிறைவு செய்வார் என ஸ்குவாஷ் ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஏற்கனவே சீ போட்டி ,ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த்  போட்டி உட்பட பல்வேறு அனைத்துலக ஸ்குவாஷ் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ள சிவசங்கரி பல போட்டிகளில் வெற்றியையும் பதித்திருக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் உயர்கல்வியை மேற்கொண்டுவரும் சிவசங்கரி தொழில்ரீதியான ஸ்குவாஷ் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். உலக மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் அவர் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

இதனிடையே பிலிடெல்பியாவில் நடைபெற்றுவரும் அமெரிக்க பொது விருது ஸ்குவாஷ் போட்டியில்  காலிறுதி ஆட்டத்திற்கு  தேர்வு பெற முடியாமல்  போனாலும் அப்போட்டி தமக்கு‌ நல்லதொரு  அனுபவத்தை தந்தாக சிவசங்கரி  தெரிவித்தார்.

இப்போட்டியில்  10 ஆவது நிலை  ஆட்டக்காரரான இங்கிலாந்தின்  அலிசன்‌ வாட்டரை  11- 5, 4 -11, 11 -7, 11 -9 என்ற  ஆட்டக் கணக்கில்  வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு  அவர் தகுதி பெற்றுள்ளார். எனினும் இன்று காலையில் மூன்றாவது சுற்றில்  இங்கிலாந்தின்  லாரா ஜேன் பேரியிடம்  12-10, 9-11,6-11,12-14 என்ற ஆட்டக் கணக்கில் சிவசங்கரி தோல்வி கண்டார்.

உலகின் பதின்மூன்றாம் நிலை ஆட்டக்காரரான வாட்டரை வீழ்த்தியதன் மூலம்  தொழில் ரீதியிலான ஸ்குவாஷ் விளையாட்டாளர்  சங்கம் மற்றும் தொழில் ரீதியிலான மகளிர் ஸ்குவாஷ் விளையாட்டாளர் சங்கத்தின்  ஆட்டக்காரர்களின் ரேங்க்கிங்  பட்டியலில் சிவசங்கரி முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker