Latestமலேசியா

2020 வரவு செலவு திட்டம் – திருப்தியடைந்தார்களா மக்கள் ?

கோலாலம்பூர் அக் 12 – அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். இந்த வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும்  குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும்  அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட இந்தி வரவு செலவுத் திட்டம் குறித்து மொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் பல கருத்துகளைக் கொண்டிருந்தனர். சிலர் திருப்தியடைந்த வேளை, சிலர் அதிருப்திக் கொண்டுள்ளனர்.

முக்கிய நகர்புறங்களில் குறைந்தபட்ச சம்பளம் 1200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும்  வாழ்க்கை செலவினங்களை சமாளிப்பதற்கு இந்த தொகை போதுமானதாக இல்லை என எம். டி.யு.யூ..சி எனப்படும்  மலேசியத் தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளர் ஜே. சாலமோன் கூறினார்.

குறைந்தபட்ச சம்பளம் 1,800 வெள்ளியாகஅதிகரிக்கப்பட்டிருந்தால் அது   மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார். .எனினும் இந்த சம்பள விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாங்கம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் சாலமன் வலியுறுத்தினார்.

அதோடு துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கோலா எனப்படும் வாழ்க்கை செலவின படித்தொகையாக மாதந்தோறும் 500 வெள்ளி வழங்க வேண்டுமென எம். டி. யூ.சி கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதது வருத்தத்தை அளிப்பதாக  சாலமன் தெரிவித்தார்.  மேலும் பட்டதாரிகளுக்கான முயற்சி என்ற திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்து இருப்பது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு முழு கடப்பாட்டுடன்  இருக்கவேண்டுமென  சாலமன் வலியுறுத்தினார்.

30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு  வேலைவாய்ப்புக்களை  உருவாக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு அரசாங்கம் வழங்க முன்வந்திருக்கும் ஊக்குவிப்பு சலுகையை மகளிர் உதவி இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் சுமித்ரா வரவேற்றார்.

பெண்கள் பொருளாதாரத் துறையில் குறிப்பாக வர்த்தகத் துறையிலும் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும்.அவர்களை தொழில்முனைவராக உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு நிதியையும் அரசாங்கம் வழங்க முன்வந்திருப்பதும் பாராட்டக்கூடிய ஒன்று  என அவர் தெரிவித்தார்

பெண்கள் தங்களது  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக குறிப்பாக 30 முதல் 50 வயது உடைய பெண்கள் வேலை செய்வதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வழங்கியிருக்கும் சலுகை விவேகமான ஒன்று என மலேசிய மகளிர் தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷரிப்பா   ஹம்ஸா கூறினார்.

கிட்டத்தட்ட  33,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பெண்கள் வேலை மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபடுவதன் மூலம் நாட்டின் மேம்பாட்டில் அவர்கள் தங்களது பங்கேற்பை மேலும் அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் டாக்டர் ஷரிப்பா சொன்னார

பெண்கள் வர்த்தகத் துறையில் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு 50 கோடி வெள்ளி புதிய கடன் திட்டத்தையும் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது இந்த கடன் வசதியை வர்த்தகத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது போக போகத்தான் தெரியும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவினங்களை சமாளிப்பதற்கான அம்சங்கள் எந்தளவுக்கு பயனளிக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker