Top Stories

Grid List

கோலாலம்பூர், மார்ச்.22- எப்போதுமே சர்ச்சைக்குரியவராக விளங்கி வரும் பெர்காசா தலைவர் டத்தோ  இப்ராகிம் அலி, விரைவில் நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என்று அறிவித்திருக்கிறார்.

'கிளாந்தானிலுள்ள பாசீர் மாஸ் அல்லது ரந்தாவ் பாஞ்சாங் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் எப்படியாவது நான் போட்டியிட்டே தீருவேன். ஏனெனில் இந்தத் தொகுதிகளின் மக்கள் நான் அவர்களின் தொகுதிக்கே திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்' என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்ராகிம் அலி தெரிவித்தார்.

'எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாம் என்பது குறித்து நான் இன்னமும் முடிவு செய்யவில்லை. எந்தக்  கட்சியிடம் இருந்தாவது அழைப்பு வருமா? என நான் காத்திருக்கிறேன். அப்படியில்லாவிட்டால் நான் சுயேட்சையாகப் போட்டியிடுவேன்' என்று அவர் சொன்னார்.

ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதே சிறப்பு என்று நினைக்கிறேன். அப்படிச் செய்வது எனக்கு எளிதாக இருக்கும்.  நான் எளிதாக வெல்லவும் முடியும் என்றார் அவர்.  மாசீர் மாஸ் தொகுதியில் வெவ்வேறு கட்சிகளின் கீழ் போட்டியிட்டு இப்ராகிம் அலி  ஏற்கெனவே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்ராஜெயா, மார்ச். 21- முன்மொழியப் பட்டிருக்கும் உத்தேசப் போலி செய்தித் தடுப்புச் சட்ட மசோதா, அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஷாலினா ஒஸ்மான் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய முன்னணி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத அல்லது போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான  நடவடிக்கையாக இந்த உத்தேசச் சட்ட மசோதா அமையும் என்று அவர் சொன்னார்.

இத்தகையச் போலிச் செய்திகள் பரப்பப்படும் விஷயத்தில் எத்தனை வகையான குற்றங்கள் உள்ளன என அடையாளம் காணப்படும். தவறான செய்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் ஆகியவற்றில் இருந்து மக்களின் நலன்களைக் காப்பதற்காக மசோதா வரையப் பட்டிருப்பதாக அமைச்சர் அஷாலினா சொன்னார்.

கூட்டரசு அரசியல் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்திற்கான உரிமையைத்  தடுப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த முயற்சியை எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் என்று தாம்  நம்புவதாக அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோலாலம்பூர், மார்ச் 21- எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தேசிய முன்னணி, தனது தேர்தல் கொள்கை அறிக்கையைப் பிரகடனம் செய்தி ஓரிரு தினங்களுக்குள் அதன் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த காலங்களில்  வேட்பாளர்கள் நியமன நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பும், சில வேளைகளில் வேட்பாளர் தினத்தன்றும் தேசிய முன்னணி தனது வேட்பாளர் பட்டியலை  அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறைதான், முதல்முறையாக வேட்பாளர்களின் பெயர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக, அவசியமான ஆயத்தப் பணிகளை செய்ய வேட்பாளர்களுக்கு போதுமான அவகாசம் தரப்படும்.

எனினும், இதுவரையில் வேட்பாளர் தேர்வு நிலவரம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கான அங்கீகாரக் கடிதத்தை டத்தோஶ்ரீ நஜிப், தாமே அங்கீகரித்து வழங்குவாரா? என்பது குறித்து இன்னும் எந்த அறிகுறியும் தெரியவில்லை.

கடந்த காலங்களில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கான கடிதங்களை மாநில தேசிய முன்னணி தலைவர்களே வழங்கி வந்துள்ளனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

கோலாலம்பூர், மார்ச். 22- தங்களின் சைக்கிள்கள், விமான நிலைய  ஊழியர்களால் மிக மோசமான முறையில் கையாளப்பட்டது தொடர்பான காணொளி ஒன்று சமுக ஊடகங்களில் பரவிய நிலையில்,  சம்பந்தப்பட்ட சைக்கிள்  உரிமையாளர்களிடம் ஏர் ஆசியா விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

இதற்கு ஈடாக,  ஏப்ரல் மாதம் முழுவதும் தங்களின் விமானத்தில் சைக்கிள்களுக்கு அனைத்துக் கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று தலைமைச் செயல்நிலை அதிகாரியான ரியாட் அஸ்மாட் தெரிவித்தார்.

'சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சைக்கிள்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்த போது ஒரு சைக்கிளோட்டியான எனக்கே மனதுக்கு கஷ்டமாக இருந்தது' என்று ரியாட் அஸ்மாட் சொன்னார்.

தைவானில் இருந்து கே.எல்.ஐ.ஏ. 2-வுக்கு திரும்பி வந்த போது தம்முடைய சைக்கிள்களை ஊழியர்கள் தவறான முறையில் கையாண்டது கண்டு அது தொடர்பான காணொளியை  ஒரு பயணி  வெளியிட்டிருந்தார். 

இது குறித்துக் கருத்துரைத்த ஏர் ஆசியா குழுமத் தலைமைச் செயல்நிலை டான்ஶ்ரீ  டோனி பெர்னாண்டஸ்,  இந்த பொருள்களை கையாளும்  பொறுப்பு மற்றொரு தனியார் நிறுவனமான ஜிடிஆர் நிறுவனத்துடன் கூட்டுத் திட்ட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும் இந்த தவறுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏர் ஆசியா ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

நாங்கள் தவறு செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் துணிவுடன் ஏற்றுக் கொள்வோம்.  அந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று தம்முடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததோடு அந்த ஊழியர்கள் சைக்கிள்களைத் தவறாக கையாண்ட காணொளியையும் டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் அதில் பதிவு செய்துள்ளார்.

 

காஜாங், மார்ச் 21- காஜாங் வட்டாரத்தில் டோயொட்டா ஹைலக்ஸ் வாகனங்களைக் குறித்து வைத்து வாகனங்களைத் திருடி வந்த கும்பலுக்கு எதிராக போலீசார் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

சுங்கை லோங் மற்றும் பண்டார் செராஸ் ஆகிய பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதக் கடைசியில் இத்தகைய 5 வாகனத்தைத் திருட்டுக்களில் நால்வர் கொண்ட இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது என்று காஜாங் ஓசிபிடி துணை ஆணையர் அகமட் ஷஃபிர் முகம்மட் யுசோப் தெரிவித்தார்.

பெட்ரோல் நிலையங்களிலோ அல்லது சாலைகளிலோ டோயோட்டா ஹைலக்ஸ் வாகனங்களைக் குறி வைத்து ஓட்டுனர்களை மடக்கி இந்தக் கும்பல் வாகனங்களை அபகரித்து வந்துள்ளது.

இந்தக் கும்பல் வெட்டுக் கத்திகளைப் பயன்படுத்தி, இந்தக் கொள்ளைகளை நடத்தி வந்தது என்பதோடு, இந்தக் கும்பல் பற்றிய முக்கியத் தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வர், வாகனத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் படங்கள் சமூக வலைத்தலங்களில் பரவி இருப்பது குறித்து கருத்துரைத்த போது, காஜாங் ஓசிபிடி அகமட் ஷஃபிர் மேற்கண்டத் தகவலைத் தெரிவித்தார்.

ஈப்போ, மார்ச் 22: பள்ளிக்குள் புகுந்து திருடி வந்த   கேங் ஜிம்மி என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த  இரண்டு பெண்கள் உள்பட 22 முதல் 33 வயது டைய அறுவர் கும்பலை போலீசார் முறியடித்தனர்.

கடந்த 14 மார்ச் போலீசார் 26 வயதுடைய ஒருவனை, தங்கு விடுதியில் கைது செய்தனர் என்று துணை ஆணையர் யாஹ்யா அப்துல் ரஹ்மான் கூறினார்.

அந்தக் கும்பலிடமிருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகள், கேமரா ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றினர். பள்ளிகளின் பின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து விலைமதிப்புமிக்க பொருளை இந்தக் கும்பல் கொள்ளையடித்து வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து சந்தேக நபர்களும் இவ்வார இறுதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (ஐபிடி) நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது  அவர் சொன்னார்.

இதனிடையே  'கேங்க் வியோஸ் வைட்' என்ற குண்டர் கும்பல் சேர்ந்த இரண்டு வியட்நாமிய பெண்கள் உட்பட 27 முதல் 55 வயதுக்குட்பட்ட ஏழு சந்தேக நபர்களையும் கைது செய்தனர் என்று யாஹ்யா சொன்னார்.

Advertisement