கோலாலம்பூர், ஜூலை.20– எதிர்க்கட்சி கூட்டணியாக பக்காத்தான் ஹராப்பானில், லிம் கிட் சியாங்தான் எஜமானர். துன் மகாதீர் வெறும் கைப் பாவைதான் என்று பிரதமர் நஜிப்பின் பத்திரிக்கைத் துறைச் செயலாளர் டத்தோ துங்கு ஷரிபுடின் துங்கு அகமட் கூறினார். 

மகாதீர் ஒரு சர்வதிகாரி! இதை அவரே ஒருமுறை ஒப்புக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்ட துங்கு ஷரிபுடின், இப்போது மகாதீர் தான் எதிர்க்கட்சிகளின் தலைவர் எனக் கூறிக் கொள்கிறார். மேலும், பிரதமர் நஜிப்புக்கு இணையான தலைவர் என்றும் கூறிக் கொள்கிறார் என சுட்டிக்காட்டினார். 

எதிர்க்கட்சி கூட்டணியில் அதிகாரம் மிக்கத் தலைவர் என துன் மகாதீர் அண்மையில் கூறியிருந்தது குறித்து கருத்துரைத்தப் போது துங்கு ஷரிபுடின் மேற்கண்டவாறு சொன்னார்.

பக்கத்தான் ஹராப்பானில் நான் தலைவர். அதிக அதிகாரம் கொண்டவர் எனும் தோரணையில் துன் மகாதீர் கருத்துச் சொல்லியுள்ளார். ஆனால் அவருடைய பிரிபூமி கட்சியில் ஒரேயொரு எம்.பி. மட்டுமே உள்ளார். ஆனால், லிம் கிட் சியாங் கட்சியில் 38 எம்.பி.கள் உள்ளனர். எனவே, உண்மையில் மகாதீர் வெறும் கைப் பாவையே. லிம் கிட் சியாங்தான் எஜமானர் என்று துங்கு ஷரிபுடின் வர்ணித்தார். 

மகாதீர் ஏதோவொரு மாயையில் இருக்கிறார். யதார்த்தமான உண்மைகளை விட்டு பிரிந்து வெகுதூரத்தில் இருக்கிறார். தமக்கு மிக அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார். ஆனால், உண்மையாக கைப் பாவைதான் சர்வாதிகாரியான ஜ.செ.க.வின் ஆலோசகரான லிம் கிட் சியாங் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர், ஜூலை.19 – தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து எதிர்க்கட்சி கூட்டணியினர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற ஆயுதம் பிரதமரான டத்தோ ஶ்ரீ நஜிப் கையில் உள்ளது. அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தமக்கும் அம்னோவுக்கும் சாதகமாக இல்லாமல் போகுமானால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரதமர் நஜிப் பயன்படுத்துவார் என்று அவர் எச்சரித்தார். 

நாட்டையும் மலாய் இனத்தையும், இஸ்லாத்தையும் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று ஏற்கனவே பிரதமர் நஜிப் கூறியிருக்கிறார். தாமும் அம்னோவும் எவ்வகையிலும் அகற்றப் பட முடியாதது என்று நஜிப் கருதுகிறார் என்பதுதான் அவருடைய மேற்கண்ட கூற்றுக்கு அர்த்தம் என்று தான் கருதுவதாக இப்ராஹிம் சொன்னார்.

மேலும், தம்மால் மட்டுமே நாட்டையும் மலாய் இனத்தையும், இஸ்லாத்தையும் தற்காக்க முடியும் என்று அவர் கருதுகிறார் என்று ஸைட் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செயல்பட்ட தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை ஏற்பதற்கும் பேரரசரின் இணக்கத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நாட்டில் அவசர காவல் பிரகடனத்தை பிரகடனப்படுத்தவும் அதிகாரம் வழங்கியுள்ளது என்றார் முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம்.

இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேரரசரின் ஒப்புதல் இன்றியே சட்டமாகிவிட்டது என்று சுட்டிக் காட்டினார் அவர். இறுதியாக எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

புத்ராஜெயா, ஜூலை.18- பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப் பெற்றால், அன்வாரை நாட்டின் பிரதமராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்போவதாக துன் மகாதீர் முகமட்  வலுவான ஒப்புதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களின் ஆசைக்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு என அவர் பெர்டானா தலைமை அறவாரிய அலுவலகத்தில் பேசும் போது தெரிவித்தார். மேலும், அடுத்த பிரதமர் யார்? என்று தேர்வு செய்ய சரியான நேரத்திற்கு காத்திருக்கவேண்டும் என்று மகாதீர் கூறினார். வரும் தேர்தலில் பல ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய வியூகம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பிரதமரின் பெயரை நாங்கள் உகந்த நேரத்தில் அறிவிப்போம். அது இப்போது கூட இருக்கலாம் அல்லது தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தலில் வென்ற பின்னராகக் கூட இருக்கலாம் என்று மகாதீர் குறிப்பிட்டார். 

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு தகுதி பெறமுடியாது என்று ஊடகங்களில் சில கருத்துகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோலாலம்பூர், ஜூலை.18- ஜசெகவின் மத்திய நிர்வாகக் குழு தேர்தலை நடத்த சங்கங்கள் பதிவு இலாகா வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்திற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சங்கங்கள் பதிவு இலாகா திட்டவட்டமாக அறிவித்தது. 

கடந்த 7ஆம் தேதி ஜூலை மாதம் ஜசெக தனது மத்திய நிர்வாக குழு தேர்தலை நடத்த வேண்டும் என சங்கங்கள் பதிவு இலாகா கட்டளையிட்டது. அதனை அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு நேற்றைய தினம் அது அதிகாரப்பூர்வக் கடிதத்தையும் ஜசெகவிற்கு அனுப்பிவிட்டது. 

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் 14 நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்க கோரி பதிவுத் துறை தலைமை இயக்குனர் டத்தோ முகம்மட் ரஷின் அப்துல்லா கேட்டுக் கொண்டார். 

கடந்த 2013-ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலும் முக்கிய கட்சி நியமனங்களும் சட்டத்திற்குப் புறம்பானவை என 4 ஆண்டுகளுக்குப் பிறகே சொல்வது அரசியல் சூழ்ச்சியென ஜசெக தலைவர்கள் சங்கங்கள் பதிவு இலாகாவின் மீது அதிருப்தியை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 பெட்டாலிங் ஜெயா, ஜூலை.17- நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளதாக பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

கூடிய விரைவில் 14ஆவது பொதுத்தேர்தல் நடக்கும் என இம்மாத ஆரம்பத்தில் பிரதமர் கூறியதைத் தொடர்ந்து தான் இந்த வதந்திகள் வந்ததாக தெரியவருகிறது.

இதனிடையே, 14ஆவது பொதுத்தேர்தல் வரும் செப்டம்பர் தொடங்கி அடுத்த வருடம் மார்சுக்குள் நடைபெறும் என ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதுவும், நீண்ட பள்ளி விடுமுறை காலங்களான இவ்வருட டிசம்பர் அல்லது அடுத்த பிப்ரவரி சீனப் புத்தாண்டின் போது நடைபெறும் என ஆரூடம் கூறப்படுகிறது.

கடந்த  2013-ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய நடப்பில் உள்ள நாடாளுமன்றம் வரும் 2018- ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைத்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தேர்தலை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குள் நடத்திவிட வேண்டும்.

பத்துகாஜா, ஜூலை.17- மலேசியாவில் சுமார் 7 விழுக்காடாக இருக்கும் இந்தியர்கள் தங்களின் பலத்தைக் காட்டவும் உரிமையைப் பெறவும் முதலில் வாக்காளர்களாக தங்களைப் பதிந்து கொள்ளுதல் அவசியம் என மஇகா தேசியத் துணைத் தலைவரும், துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ தேவமணி வலியுறுத்தினார்.

கடந்த காலக் கட்டத்தில் கட்சியில் நிறைய குழப்பங்களும் பிரச்சனைகளும் சூழ்ந்து கட்சியின் செயல் திறனை குன்றச் செய்தன. எனினும், அவையாவும் இப்பொழுது சூரியனைக் கண்ட பனி போல மறைந்து விட்டன. டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் சிறப்பான தலைமையில் தற்போது மஇகா செழுமையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடைய, மலேசிய இந்திய மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்திய தூரநோக்கு திட்டத்தைப் பற்றியும் அவர் பேசினார். சுமார் 162 பக்கம் அடங்கிய அந்த திட்ட வரைவு மலேசிய இந்திய மக்களின் குடும்பம், சமூகம், கல்வி, பொருளாதாரம் என அனைத்து வகையிலும் ஒரு முழுமை பெற்ற சமூகமாக மாற்றும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதில், குறிப்பாக வர்த்தகத் துறையில் இந்தியர்களை முன்னேற்ற புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என தேவமணி சொன்னார்.

மேலும், கிளாந்தான் மாநிலத்தில் அமல்படுத்தியுள்ள ஷாரியா  சட்டத்தின் கீழான பிரம்படித் தண்டனையைக் குறித்து அவரும் இதர மஇகா தலைவர்களும் பிரதமரிடம் பேசியிருப்பதையும் அவர் விளக்கினார்.

இதனிடையே, நாடுமுழுவதும் உள்ள மஇகா உறுப்பினர்களில் இதுவரையில் வெறும் 18 ஆயிரம் பேர்களே வாக்காளர்ளாக பதிவு செய்துள்ளனர். இன்னும், 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களர்களாக பதிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நமது இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் 24-ஆம் ஆண்டு மாநாட்டை தொடக்கி வைத்தபோது அவர் கூறினார்.

 

கேமரன்மலை, ஜூலை.18-  கேமரன்மலையிலுள்ள ஆலயம், பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றோர் இல்லம், உட்பட இதர மாநிலங்களைச் சேர்ந்த 23 பொது அமைப்புகளுக்கு அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவிடமிருந்து 5 லட்சம் வெள்ளி மானியத்தை மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் பெற்றுத் தந்துள்ளார். 

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் ஐசியு (ICU) எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவிடம் விண்ணப்பம் செய்வதற்கும் அதனைப் பெற்றுத் தருவதற்கும் உறுதுணையாக இருந்த அவர் நேற்றுக் காலை இங்குள்ள கோல்ஃப் கோர்சில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மானியத்தை எடுத்து வழங்கினார்.

கேமரன்மலை, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேரா, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் சேவையாற்றி வருபவர்களுக்கு இம்மானியம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மானியத்தைப் பெற்றுக் கொண்ட பொது அமைப்புகள், தங்கள் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவுவதோடு, சமூக ரீதியிலான முன்னேற்றத்திற்கும் வழிகாண வேண்டும். மேலும், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை போல எப்படிப்பட்ட சவாலான காலக்கட்டத்திலும் மக்களுக்கு உதவுவதை நிறுத்தக்கூடாது எனவும் ஆலோசனை கூறினார். 

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் எதிர்நோக்கி வரும் சவால்களை தகர்த்தெறிந்து மக்களுக்கு உதவி செய்வதை மட்டுமே தமது முதன்மை குறிக்கோளாகக் கொண்டுள்ளார் என்பதை அவரின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. 

மீண்டும் கேமரன்மலையை வளமாக்குவோம் (Make Cameron Highlands Nice Again) என்ற திட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்வழி, கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகளை வைத்து பார்க்கும்போது, இங்குள்ள மக்களுக்கு இன்னும் கூடுதலான சேவையை வழங்க வேண்டும் எனத் தாம் எண்ணம் கொண்டுள்ளதாக நேற்று நடந்த மானியம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். 

More Articles ...