கேமரன்மலையில் பொது அமைப்புகளுக்கு வெ.5 லட்சம் மானியம்! -டான்ஶ்ரீ கேவியஸ் 

அரசியல்
Typography

 

கேமரன்மலை, ஜூலை.18-  கேமரன்மலையிலுள்ள ஆலயம், பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றோர் இல்லம், உட்பட இதர மாநிலங்களைச் சேர்ந்த 23 பொது அமைப்புகளுக்கு அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவிடமிருந்து 5 லட்சம் வெள்ளி மானியத்தை மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் பெற்றுத் தந்துள்ளார். 

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் ஐசியு (ICU) எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவிடம் விண்ணப்பம் செய்வதற்கும் அதனைப் பெற்றுத் தருவதற்கும் உறுதுணையாக இருந்த அவர் நேற்றுக் காலை இங்குள்ள கோல்ஃப் கோர்சில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மானியத்தை எடுத்து வழங்கினார்.

கேமரன்மலை, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேரா, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் சேவையாற்றி வருபவர்களுக்கு இம்மானியம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மானியத்தைப் பெற்றுக் கொண்ட பொது அமைப்புகள், தங்கள் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவுவதோடு, சமூக ரீதியிலான முன்னேற்றத்திற்கும் வழிகாண வேண்டும். மேலும், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை போல எப்படிப்பட்ட சவாலான காலக்கட்டத்திலும் மக்களுக்கு உதவுவதை நிறுத்தக்கூடாது எனவும் ஆலோசனை கூறினார். 

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் எதிர்நோக்கி வரும் சவால்களை தகர்த்தெறிந்து மக்களுக்கு உதவி செய்வதை மட்டுமே தமது முதன்மை குறிக்கோளாகக் கொண்டுள்ளார் என்பதை அவரின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. 

மீண்டும் கேமரன்மலையை வளமாக்குவோம் (Make Cameron Highlands Nice Again) என்ற திட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்வழி, கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகளை வைத்து பார்க்கும்போது, இங்குள்ள மக்களுக்கு இன்னும் கூடுதலான சேவையை வழங்க வேண்டும் எனத் தாம் எண்ணம் கொண்டுள்ளதாக நேற்று நடந்த மானியம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS