இந்தியர்களின் உரிமையை நிலைநாட்ட  வாக்காளர்கள் பலம் கூடவேண்டும் -தேவமணி

அரசியல்
Typography

பத்துகாஜா, ஜூலை.17- மலேசியாவில் சுமார் 7 விழுக்காடாக இருக்கும் இந்தியர்கள் தங்களின் பலத்தைக் காட்டவும் உரிமையைப் பெறவும் முதலில் வாக்காளர்களாக தங்களைப் பதிந்து கொள்ளுதல் அவசியம் என மஇகா தேசியத் துணைத் தலைவரும், துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ தேவமணி வலியுறுத்தினார்.

கடந்த காலக் கட்டத்தில் கட்சியில் நிறைய குழப்பங்களும் பிரச்சனைகளும் சூழ்ந்து கட்சியின் செயல் திறனை குன்றச் செய்தன. எனினும், அவையாவும் இப்பொழுது சூரியனைக் கண்ட பனி போல மறைந்து விட்டன. டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் சிறப்பான தலைமையில் தற்போது மஇகா செழுமையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடைய, மலேசிய இந்திய மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்திய தூரநோக்கு திட்டத்தைப் பற்றியும் அவர் பேசினார். சுமார் 162 பக்கம் அடங்கிய அந்த திட்ட வரைவு மலேசிய இந்திய மக்களின் குடும்பம், சமூகம், கல்வி, பொருளாதாரம் என அனைத்து வகையிலும் ஒரு முழுமை பெற்ற சமூகமாக மாற்றும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதில், குறிப்பாக வர்த்தகத் துறையில் இந்தியர்களை முன்னேற்ற புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என தேவமணி சொன்னார்.

மேலும், கிளாந்தான் மாநிலத்தில் அமல்படுத்தியுள்ள ஷாரியா  சட்டத்தின் கீழான பிரம்படித் தண்டனையைக் குறித்து அவரும் இதர மஇகா தலைவர்களும் பிரதமரிடம் பேசியிருப்பதையும் அவர் விளக்கினார்.

இதனிடையே, நாடுமுழுவதும் உள்ள மஇகா உறுப்பினர்களில் இதுவரையில் வெறும் 18 ஆயிரம் பேர்களே வாக்காளர்ளாக பதிவு செய்துள்ளனர். இன்னும், 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களர்களாக பதிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நமது இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் 24-ஆம் ஆண்டு மாநாட்டை தொடக்கி வைத்தபோது அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS