பிரதமரை அவமதித்து சமூக ஊடகப் பதிவு: மூவர் மீது குற்றச்சாட்டு!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஆக.19- பிரதமரை அவமதித்ததாக வெவ்வேறான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவர், அதனை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மாலை 5.11 மணியளவில் ‘ஓதாய் பெர்சே’ முகநூல் பக்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பை அவமதிக்கும் வகையில் கருத்துப் பதிவு செய்ததாக 29 வயதுடைய நோர் சபாரியா அப்துல் காதிர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மாலை மணி 7-க்கும் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி காலை மணி 7-க்கும் இடைப்பட்ட காலத்தில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நஜீப் மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் படத்தை தவறான வகையில் பதிவு செய்ததாக 19 வயதுடைய கடைக்காரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிகாலை 2.53 மணியளவில் ‘சைன் அல் அஸ்னாம்’ என்ற முகநூல் பக்கத்தில் ‘ஜிம்பாப்வே டூடே, இஸ் மலேசியா டுமோரோ’ என்ற கட்டுரையுடன் பிரதமர் நஜீப் மற்றும் சீனாவின் முன்னாள் தலைவர் மாவோ சே துங்கின் படத்தை இணைத்து பதிவு செய்ததற்காக ரொட்டி சானாய் வியாபாரி மஸ்லான் யூசோப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர்கள் மூவரும் 1998-ஆம் ஆண்டின் தொடர்புத் துறை மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகப்பட்ச 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த வழக்குகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS