தீபாவளி வேளையில் மலேசியா தினம்; எதிர்க்கட்சிகளுக்கு இராமசாமி கண்டிப்பு!

அரசியல்
Typography

பினாங்கு, செப்.14- தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்குப் பின்னர் 'பக்காத்தான் ஹராப்பான்' கூட்டணி மலேசியத் தினத்தைக் கொண்டாட நாள் குறித்து இருப்பது குறித்து ஜ.செ.க. துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி கேள்வி எழுப்பினார். 

தங்களின் அரசியல் மதிப்பீடுகளில் இந்தியர்கள் குறித்து எதிர்க்கட்சிக் கூட்டணி ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது என்று அவர் தம்முடைய செய்தியில் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்தும் போதுமானதாக இல்லை என்கிற சர்ச்சை அடங்குவதற்கு முன்பே இந்திய சமுதாயத்திடம் இன்னொரு அலட்சியம் காட்டப்பட்டிருக்கிறது.

தனது மலேசிய தேசிய தினத்தைக் கொண்டாட்டத்தைப் பக்காத்தான் ஹராப்பான் செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து  அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. கெடா சுல்தானின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இது வேறொரு தேதிக்கு ஒத்திவைத்தது தவிர்க்கமுடியாதது.

ஆனால், தீபாவளி அக்டோபர் 18-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் 20-ஆம் தேதி மலேசியத் தினக் கொண்டாட்டத்திற்கு நாள் நிர்ணயிக்கப் பட்டிருப்பதானது இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமையவில்லை என்று டாக்டர் இராமசாமி சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான இந்தியர்கள் தீபாவளிக்கு முன்பும் பின்னும் விடுமுறையில் இருப்பார்கள், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றுபட்டு இருப்பார்கள். இப்படியொரு சூழலில் மலேசியத் தினக் கொண்டாட்டத்தை அக்டோபர் 20ஆம் தேதியன்று நடத்த பக்காத்தான் ஹராப்பான் முடிவு செய்தது இந்தியா சமுதாயத்தை அவமதிப்பது போல் அமைந்துள்ளது. 

“இதுவே ஹரிராயா அல்லது சீனப்பெருநாள் விழாவின் போது இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பக்காத்தான் ஹராப்பான் துணியுமா? என்பதுதான் என்னுடைய கேள்வி" என்றார் அவர்.

ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணியினர் எண்ணிக்கையைத்தான் பெரிதாக கருதுகிறார்கள் போல் தெரிகிறது. 

ஓர் இனம் சார்ந்த சமுதாயம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலோ, அல்லது பொருளாதார துறையில் மிகுந்த செல்வாக்குடன் இல்லாமல் போனாலோ, அரசியல் ரீதியில் அந்த சமுதாயம் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது என்று டாக்டர் இராமசாமி சொன்னார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS