பிரதமர் பதவிக்கு லிம் கிட் சியாங்  பொருத்தமானவர்! -இராமசாமி 

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், அக்.12- ஜசெக கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், நாட்டின் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் பி.இராமசாமி கருத்துரைத்துள்ளார். 

நாட்டின் அனைத்து கட்சிகளும் அடுத்த பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பிளவுப்பட்டிருக்கும் வேளையில், பணிவான பண்பைக் கொண்டுள்ள லிம் கிட் சியாங்தான் அந்தப் பதவிக்கு சிறந்தவர் என்று பெரித்தா டெய்லி என்ற இணையச் செய்தியிடம் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர்தான் பொருத்தமானவர். இருந்தபோதிலும், அவர் அந்தப் பதவியை வகிக்க விருப்பம் கொண்டுள்ளாரா? என்பது கேள்விக் குறியே என்றார் அவர். 

"ஒரு தலைவருக்கான அனைத்து தகுதியும் அவரிடத்தில் உண்டு. ஆனால், இந்நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு துளியும் இல்லை. அவர் பெயர் பலமுறை பரிந்துரைக்கப்பட்டாலும், அந்த ஆலோசனையை உடனடியாக கைவிடச் சொல்வார். அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அவரின் எண்ணம்," என்று அவர் மேலும் கூறினார். 

அம்னோ, இன அடிப்படையில் அரசியல் நடத்துவதாகவும், அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் சில குழுக்கள், கிட் சியாங் பிரதமர் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை எதிர்ப்பதாக டாக்டர் இராமசாமி சொன்னார்.  

ஜசெக மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கி, அதன் வாயிலாக இலாபம் அடையும் நோக்கத்துடன் இந்த குழுக்கள் செயல்படுவதாக அவர் கூறினார். 

இனபேதத்தை காரணம் காட்டி, பக்காத்தான் கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதே அரசியலில் தொடர்ந்து நிலைத்து இருக்க கஷ்டப்படும் அம்னோவின் திட்டமாகும். 

"தனது அரசியல் வாழ்க்கைக்காக பக்காத்தானை கிட் சியாங் உபயோகித்துக் கொள்கிறார் என்று வேண்டுமென்றே தவறான கருத்துகளை அம்னோ வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர். இன பேதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை உசுப்பேற்றுவதில் அவர்கள் தேர்ச்சி அடைந்தவர்கள்," என்றார் அவர். 

பிரதமர் ஆவதற்கு தேவையான திறைமைகள் இருந்தால் போதுமானது. அவர் சீனர் என்பது கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. 

இந்த இன, மதபேத அலை இப்போது ஓயப் போவதில்லை. ஆனால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் லிம் கிட் சியாங்தான். சிறந்த மலேசியாவை உருவாக்க, பல வருடங்கள் அவர் பாடுபட்டு வருகின்றார் என இராமசாமி தெரிவித்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS