ஷாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? ஸாஹிட் விளக்கம் தருவாரா? -குலா கேள்வி

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், அக்.22- இந்தியாவினால் தேடப்படும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் போதகர் ஷாகிர் நாயக்கின் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, அமைச்சு நிலையிலான விளக்க அறிக்கையை வெளியிடவேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கோரிக்கை விடுத்தார்.

தற்போது மலேசியாவில் வசிப்பிட அந்தஸ்தை பெற்று இருப்பதாகக் கருதப்படும் ஷாகிர் நாயக்கின் பயங்கரவாதத் தொடர்பு மீதான விசாரணை அறிக்கையை இந்தியாவின் தேசிய புலனாய்வுத் துறையான என்.ஐ.ஏ., இந்திய உள்துறை அமைச்சிடம் சமர்ப்பித்து, அவரை நாடு கடத்தக் கோருவது மீதான ஒப்புதலை பெறத் தயாராக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவினால் தேடப்படும் இவர், அண்மையில் புத்ரா ஜெயா பள்ளிவாசலில் நடந்த தொழுகை ஒன்றிலும் ஷாகிர் நாயக் கலந்து கொண்டது பற்றி புகைப்படத்துடன் செய்தி வெளியாகியது. மேலும் இவருக்கு சவுதி அரேபியாவும் குடியுரிமை அந்தஸ்தை வழங்கி இருக்கிறது.

இந்தியா அடுத்த கட்டமாக, இவரை மலேசியாவில் இருந்தும் சவுதி அரேபியாவிலிருந்தும் இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியொரு சூழ்நிலையில், மலேசிய உள்துறை அமைச்சர் ஸாஹிட், மிகத் துணிவாக அமைச்சின் நிலைப்பாடு குறித்து விளக்க அறிக்கையைத் தரவேண்டும் என்று குலசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்முடைய கோரிக்கையை அமைச்சர் ஸாஹிட் அலட்சியப்படுத்தி விடுவாரேயானால், அது ஏற்புடையதாக இருக்காது. இதில் உள்துறை அமைச்சின் நிலைப்பாடு குறித்து விளக்க வேண்டியது அமைச்சரின் கடமை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS