கேமரன் மலைத் தொகுதியில் பரபரப்பு!  சிவராஜ், கேவியஸ் இடையே ராமசாமி..!

அரசியல்
Typography

 

ஜோர்ஜ்டவுன், அக்.31- கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடப் போவது ம.இ.காவா அல்லது மைபிபிபியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அங்கு தேசிய முன்னணி வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது முதல்வர் டாக்டர் பி.ராமசாமி இந்தத் தொகுதியில் களம் இறங்குவார் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

ம.இ.காவின் வேட்பாளராக இளைஞர் அணித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல் ம இ கா வட்டாரங்களில் பலமடைந்து வரும் வேளையில், அத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தேசிய முன்னணியின் பங்காளி கட்சியான மைபிபிபிக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக அதன் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் கோரி வருகிறார்.

மேலும் இந்தத் தொகுதியில் தாம் போட்டியிடுவதற்கு ஏதுவாக பல மாதங்களாக பல்வேறு பணிகளையும் டான்ஶ்ரீ கேவியஸ் மேற்கொண்டு வருகிறார். கடந்த 17 ஆண்டுகளாக அந்தத் தொகுதியில் போட்டியிடும் நாளுக்காக தாம் காத்திருப்பதாக கேவியஸ் கூறி வருகிறார்.

அவரது இந்தக் கோரிக்கை, ம.இ.காவினர் மத்தியில் ஆட்சேபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, அத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் ம.இ.காவிற்கே வழங்கப்படும் என்று பகாங் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அட்னான் யாக்கோப் தன்னிடம் தெரிவித்ததாக பகாங் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஆர்.குணசேகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், இம்முறை தனது சொந்த முயற்சியில் போட்டியிடுவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று கேவியஸ் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே இந்தத் தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளராக டாக்டர் ராமசாமி நிறுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. 

2008-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில், பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில், எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, அப்போதைய பினாங்கு முதல்வர் டான்ஶ்ரீ டாக்டர் கோ சூ கூனைத் தோற்கடித்து பிரபலமானார் பி.ராமசாமி. ஜசெகவின் கட்சியின் முக்கிய இந்தியத் தலைவராக இவர் கருதப்படுகிறார். 

பிரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இவர், பினாங்கு மாநில இந்திய விவகாரங்களை கையாண்டு வருகிறார். ம.இ.காவை நீண்ட நாள்களாகவே கடுமையாக விமர்சிக்கக் கூடியவராகவும் இருந்து வருகிறார்.

இந்திய விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அடங்கிய தொகுதியாக கேமரன் மலைத் தொகுதி விளங்குகிறது. 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், இத்தொகுதியில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS